ஐ.எஸ்.எல் நான்காவது சீஸனை, தோல்வியுடன் தொடங்கியுள்ளது சென்னையின் எஃப்.சி (#CHEGOA). ஸ்கோர் என்னவோ 3 – 2 என கௌரவமான ஸ்கோர்தான். ஆனால், ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும் சென்னை அணி எந்த அளவுக்குத் திணறியது என்று. 39 நிமிடத்தில் மூன்று கோல்கள் அடித்து சென்னையை ரணகளப்படுத்தியது கோவா. இரண்டாம் பாதியில் கஷ்டப்பட்டு கம்பேக் கொடுத்து, கோவா கோல்கீப்பரின் தயவில் இரண்டு கோல்கள் அடித்து டீசன்டாக ஆட்டத்தை முடித்தது. ஆனால், சென்னையின் எஃப்.சி-யின் திட்டங்களும், அவற்றைச் செயல்படுத்திய விதமும் மிக மோசம். 38 நிமிடத்தில் மூன்று கோல்கள் விழக் காரணம் என்ன. ஒரு ஃபீல்டு கோல்கூட அடிக்க முடியாமல் போனது ஏன். இந்த மோசமான பெர்ஃபாமன்ஸின் காரணம் என்ன. இன்ச் பை இன்ச் அனாலிஸிஸ்…
`மெரினா அரினா’ எனப்படும் நேரு மைதானத்தில் இருந்த 18,213 ஆதரவாளர்களும் முதல் பாதி முடிந்தபோது முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்தனர். 14 நிமிட இடைவெளியில் மூன்று கோல்கள் அடித்திருந்தது கோவா. அவர்களின் கோல் போஸ்டையும் பெரிதாக நாம் முற்றுகையிடவில்லை. முதல் பாதியில் சென்னை அணி இவ்வளவு சொதப்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் இந்தச் சொதப்பல் பெர்ஃபாமன்ஸுக்குக் காரணம் பயிற்சியாளர் ஜான் க்ரிகரி வகுத்திருந்த வியூகங்கள்தான். அவர் செய்த நான்கு தவறுகள்.
தவறு 1:
க்ரகரி, நேற்றைய போட்டியில் பயன்படுத்தியது 3 – 4 – 3 ஃபார்மேஷன். அதாவது மூன்று டிஃபண்டர்கள், நான்கு நடுக்கள வீரர்கள், மூன்று ஃபார்வேர்டுகள். இந்த ஃபார்மேஷன் இப்போதுதான் பிரபலமடைந்துவருகிறது. பொதுவாக, கால்பந்து அணிகள் நான்கு டிஃபண்டர்கள்கொண்ட ஃபார்மேஷனையே பயன்படுத்துவார்கள். மூன்று டிஃபண்டர்கள் உள்ளடங்கிய ஃபார்மேஷனைப் பயன்படுத்த வேண்டுமெனில், ஒன்று வீரர்கள் அதற்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வீரர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். சென்னையின் எஃப்.சி-யைப் பொறுத்தவரை இரண்டுமே இல்லை. டிஃபன்ஸில் ஆடிய தனசந்திரா சிங், செரேனோ, மெய்ல்சன் மூவருமே மூன்று டிஃபண்டர் ஃபார்மேஷனுக்குப் பழக்கப்படாதவர்கள்; ஒன்றாக இணைந்து விளையாடியதும் இல்லை. இந்த `செட்டப்’புக்கு மிகவும் முக்கியமான புரிதல் வீரர்களிடம் கொஞ்சமும் இல்லாதபோது அதைப் பயன்படுத்தியது பயிற்சியாளர் செய்த மிகப்பெரிய தவறு.
க்ரிகரி, 1998 – 2002ம் ஆண்டு வரை ப்ரீமியர் லீக்கில் ஆஸ்டன் விலா அணியின் மேலாளராக இருந்தவர். அப்போது அவர் இந்த ஃபார்மேஷனைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்தினார். அதனால், இங்கு அதைப் பயன்படுத்த நினைத்தார். ஆனால், முதல் போட்டியிலேயே பயன்படுத்தியதுதான் மிகப்பெரிய தவறு. 1998-ம் ஆண்டில் ஆஸ்டன் விலா மேலாளர் ஆன புதிதில், அதுவரை அந்த அணி ஆடிய நான்கு டிஃபண்டர் ஃபார்மேஷனைத்தான் பயன்படுத்தினார். அதன் பிறகு வீரர்களின் தன்மை அறிந்து அவர்களை தன் புதிய திட்டத்துக்குத் தயார்படுத்தினார். சென்னையின் அணியோடு அவர் இருந்த காலம் மிகவும் குறைவு. சென்னையில் பெய்த தொடர் மழையால், `ஃப்ரீ சீஸன்’ போட்டிகளும் பயிற்சிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், முதல் போட்டியில் வீரர்களுக்குப் பழக்கப்பட்ட நான்கு டிஃபண்டர் ஃபார்மேஷனோடு களமிறங்கி, பிறகு தன் ஐடியாவைச் செயல்படுத்தியிருக்கவேண்டும்.