பென்ஸ்டோக்ஸ் இன்மை, காயங்களால் வீர்ர்கள் அவதி ஆகியவற்றினால் இங்கிலாந்துக்கு நடப்பு ஆஷஸ் தொடரில் 2003-ம் ஆண்டு தொடர் போன்ற பயங்கரம் காத்திருக்கிறது என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:
பென்ஸ்டோக்ஸ் விவகாரம், வீரர்களின் காயங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது இந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்துக்கு 2002-03 ஆஷஸ் தொடர் சீரழிவை ஏற்படுத்தும் போல் தெரிகிறது.
ஜோ ரூட் மிக மிக வலுவான கேப்டனாக இருந்தால் மட்டுமே இத்தகைய சூழ்நிலைகளை சமாளிக்க முடியும்.
2002-03 தொடரில் இந்தத் தொடர் போலவே அதீத நம்பிக்கையுடன் இங்கிலாந்து வந்தது, ஆனால் டேரன் காஃப், ஆண்ட்ரு பிளிண்டாஃப் காயம் அடைய, ஆஸ்திரேலியாவை படுத்தி எடுக்கும் சைமன் ஜோன்ஸ் காயமடைந்து ஊரே திரும்பிவிட்டார்.
அதே போல் இப்போது பென்ஸ்டோக்ஸ் இல்லை, டோபி ரோலண்ட் ஜோன்ஸ் காயம், மார்க் உட் காயம், இங்கு வந்த பிறகு மொயீன் அலி, ஸ்டீவ் ஃபின், ஜேக் பால் ஆகியோர் காயங்களால் பின்னடைவு. இங்கிலாந்து பேட்டிங் பலவீனமாக உள்ளது.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள்தான் ஆஸ்திரேலியாவை ஏதாவது செய்ய முடியும். இங்கிலாந்தின் வளரும் நல்ல லெக் ஸ்பின்னர் மேசன் கிரேனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
ஜிம்மி ஆண்டர்சன் இங்கு பயன்படுத்தப்படும் கூகாபரா பந்துகளில் ஸ்விங் செய்ய வேண்டியதை எதிர்நோக்கி இங்கிலாந்து உள்ளது.
ஆஸ்திரேலியா ஸ்கோர் செய்வதை ஜோ ரூட் தடுக்கவில்லையெனில் இங்கிலாந்து பேட்ஸ்மென்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும். அதுவும் ஆஸ்திரேலியாவில் தொடக்க ஓவர்கள் கடினமாக அமையும், அதன் பிறகு கொஞ்சம் படுக்கைவச மட்டை ஷாட்களை ஆடும் போது நிலைமைகள் கொஞ்சம் எளிதாகும்.
பின்காலில் சென்று ரன்கள் அடிப்பது ஆஸ்திரேலிய பிட்ச்களில் மிக முக்கியமான உத்தி. இதனால்தான் ஆஸ்திரேலியர்களை இங்கு தோற்கடிப்பது கடினம்.
வேகம் அதிகமாக வீசும் வீச்சாளர்கள் இல்லாத நிலையில் கேப்டன்கள் நுட்பம், சாமர்த்தியமான களவியூகம், பலதரப்பட்ட பந்துகளை வீசுவது, துல்லியம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்தில் பலதரப்பட்ட வீச்சாளர்களும் இல்லை, உண்மையான வேகப்பந்து வீச்சும் இல்லை. அனைவருமே வலது கை வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர்.
எனவே இங்கிலாந்து இங்கு வெற்றி பெற அதன் பவுலர்கள் டாப் பார்மில் வீசுவது அவசியம். பேட்ஸ்மென்கள் தங்கள் ஆட்டத்திறனை அதிகரிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக கற்பனை வளத்துடன் ஜோ ரூட் கேப்டன்சி செய்ய வேண்டும். வெற்றி பெற நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்தப் பத்தியில் கூறியுள்ளார் இயன் சாப்பல்.

