பரபரப்பான பல நிகழ்வுகள் கடந்த வாரம் நாட்டில் நடைபெற்றது. பெற்றோல் நெருக்கடியால் நாடே ஸ்தம்பித்துப்போனது. சோபித்த தேரர் நினைவு தின வைபவத்தில் ஜனாதிபதி எரிமலை சீறுவதுபோல் வார்த்தைகளைக் கக்கினார்.
சைட்டம் விரோதிகள் அரசு வழங்கிய முதல் தீர்வுத் திட்டத்தை நிராகரித்து சாகும்வரையிலான உண்ணாவிரோதப் போராட்டத்தை துவங்கினார்கள், வரப்போகும் ஆபத்தை உணர்ந்த ஜனாதிபதி, உடன் குழு அமைத்து, அதிரடியாக சைட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்,
மங்களமானவர் தனது கன்னி வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்திருக்கின்றார். இவைகள் பற்றிய நிறையவே தகவல்கள் கைவசம் இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரி சோபித்த தேரர் நினைவரங்கில் சீறியது, நல்லாட்சிக்குள் கடுமையான முறுகள் நிலை இருந்து வருகின்றது என்பதனைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றது. எனவே இந்த வாரம் அது பற்றிப் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது.
அதற்கு முன்னர் இந்த நல்லாட்சி நாட்டில் மலர முதலடியை எடுத்துக் கொடுத்த மாதுலுவாவே சோபித்த தேரர் பற்றி சில வார்த்தைகள் நாமும் சொல்லி ஆக வேண்டும். என்றுமே நாட்டு நலனுக்காகவும் குடிமக்களுக்காகவும் நீதி, நியாயத்துக்காகவும் குரல் கொடுத்து வந்த ஒரு மனிதப் புனிதர்தான் இந்த மாதுலுவாவே சோபித்த தேரர்.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இனவாதியாக இவர் செலாற்றினார் என்ற பதிவுகள் எங்கும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே போன்று மக்கள் நலனுக்கான போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வந்த இவர், பல சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களால் ஒரு பயங்கரவாதி போல் பார்க்கப்பட்டு வந்திருக்கின்றார். இவரது நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் உளவுத்துறையினர் மூலம் உன்னிப்பாக அவதானித்து வந்திருக்கின்றார்கள்.
தனக்கு எதிராக ஆட்சியாளர்கள் வைராக்கியத்துடன் இருக்கின்றார்கள், தனது உயிருக்கு ஆபத்து நிறையவே இருக்கின்றது என்று நன்கு இவர் புரிந்து வைத்திருந்தாலும் தனது நியாயமான போராட்டங்களை இவர் ஒரு போதும் கைவிடவில்லை. ஜே.ஆர். ஜெயவர்தன இவரை சிறையில் இழுத்துப் போட்டுப் பார்த்தார். அப்போதும் இந்தப் போராட்டக்காரன் அடங்கிப்போகவுமில்லை, பதுங்கிக் கொள்ளவுமில்லை. தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில் மத குரு டெஸ்ட்மன் டுடுவை உலகம் பார்ப்பது போல் நமது நாட்டு மக்கள் இந்த மனிதனை-மதகுருவை நேசித்தார்கள் என்றுகூட நாம் குறிப்பிடலாம்.
போர் வெற்றியைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷக்கள் அதிகாரத்தின் உச்சப்படிகளில் நின்று கொண்டு, இதற்குப் பின்னர் குறைந்தது ஒரு அரை நூற்றாண்டுகளாவது இந்த நாட்டில் ராஜபக்ஷாக்கள்தான்; அதிகாரத்தில் இருக்கப்போகின்றார்கள். எம்மை எவரும் வீழ்த்திவிட முடியாது. எம்முடன் போட்டி அரசியல் செய்ய இந்த நாட்டடில் எவருமே கிடையாது. இந்தக் காட்டில்-நாட்டில் நாங்கள் மட்டும்தான் சிங்கம்-ராஜாக்கள் என்ற மமதையில், நாட்டில் சட்டம் சம்பிரதாயங்கள் என்ற எதுவும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று எண்ணிக் கொண்டு மன்னர்கள் போல் செயல்பட்டு வந்த நாட்கள் அவை.
ராஜபக்ஷாக்களுக்கெதிரான போராட்டத்தை முன்நின்று நடத்த எவருக்கும் அன்று துணிச்சல் இருக்கவில்லை. நாட்டில் எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு ராஜபக்ஷாக்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தும் பலம் கிஞ்சித்தேனும் இருக்கவில்லை. மாறாக அந்தக் கட்சித் தலைவர் தனது தலைமைப் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளக்கூட ராஜபக்ஷாக்களின் தயவை நாடி இருந்தார். எனவேதான் சிரிகொத்த முன்னால் ஒரு சந்தர்ப்பத்தில் ரணிலுக்காக மஹிந்த கார்ப்பட் போட்டு ரணிலின் தலைமையை அந்த சந்தர்ப்பத்தில் பாதுகாத்துக் கொடுத்தார் என்பதும் நாடறிந்த கதை.
செஞ்சட்டைக்காரர்கள் இந்த ராஜபக்ஷாக்களுக்கு எதிராக போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டிருந்தாலும் அவை தனது பதவிக்கு ஆப்பு வைக்கின்ற அளவுக்கு வலுவானதல்ல என்பதை ராஜபக்ஷாக்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். தமக்கெதிராக செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்த ஊடகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஊடகக்காரர்களை தீர்த்துக் கட்டினார்கள்-கடத்தினார்கள்! கால், கைகளை உடைத்தார்கள்! பெருந்தொகையான ஊடகக்காரகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள்.!
இந்தப் பின்னணியில்தான் இந்தத் தேரர் தடியைக் கையிலெடுத்தார். நியாயமான ஒரு சமூகம், சிங்களத்தில் சாதாரண சமாஜயக் என்ற கோஷத்துடன் தேரர் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான போரட்டத்தை ஆரம்பித்தார். அதற்காகத் தனது முதலாவது சந்திப்பை-கலந்துரையாடலை அவர் கொழும்பில் நடத்தினார். நியாயமான சமூகத்திற்கான அவரது இரண்டவது கலந்துரையாடல் கண்டி இந்துக் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.
கண்டியிலுள்ள ஒரு விசாலமான மண்டபம்தான் இந்து. அங்கு 800பேர் அளவில் அமர்ந்து நிகழ்வுகளை அவதானிக்கும் வசதி இருந்தது. குறித்த நாள், பி.ப. 4 மணியளவில் அந்த இடத்திற்கு தேரர் வந்து சேரும் போது மண்டபத்தில் 75 பேருக்கும் குறைவானவர்களே அமர்ந்திருந்தார்கள் ஏற்பாட்டாளர்களுக்குத் திருப்தியில்லாத நிலை இருப்பது அவர்களது முகங்களில் பார்க்க முடிந்தது.
ஏற்பாட்டாளர்கள் இன்னும் சற்று நேரம் பொறுத்துப் பார்ப்போம் என்று கூற சோபித்த தேரர் இல்லை இல்லை.! இந்தக் கூட்டம் போதும். மக்கள் அச்சத்துடன் இருக்கின்றார்கள். இந்த மண்டபம் நிறைய கூட்டம் வரும் என்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். இங்கு அமர்ந்திருப்பவர்களில் பலர் அரசின் உளவாளிகளாகவும் இருப்பார்கள் என்று சோபித்ததேரர் கூறி பக்கத்திலிருந்தவர்களுடன் சிறு கலந்துரையாடலை நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் இந்தக் கட்டுரையாளனும்; பக்கத்தில் நின்றவன் என்ற வகையில் ராஜபக்ஷாக்களை விரட்டியடிக்க வேண்டும் என்று நடக்கின்ற கூட்டத்திற்குத் துணிச்சலுடன் இங்கு வந்திருப்பவர்களுக்காக நான் பேசினால் போதும் என்று நம்பிக்கையுடன் கூறிவிட்டு, வாருங்கள் மேடைக்கு என்று ஏற்பாட்டாளர்கள் அழைத்துக் கொண்டு சென்றனர். எனவே இந்த நல்லாட்சி சமைக்கின்ற முதலடியை எடுத்துக் கொடுத்தவர் இந்தத் தேரரே. அத்துடன் அந்த காலகட்டத்தில் ராஜபக்ஷாக்களுக்கு எதிரான போராட்டத்தில் ரணிலால் தாக்குப்பிடிக்க முடியாது என்பது இந்த நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த கதை.
எனவே தேவைப்பட்டால் நானே மஹிந்த ராஜபக்ஷாவுக்கு எதிரான ஜனாதிபதி வேட்பாளனாக வருவேன் என்றும், அப்படி நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த நாட்டு மக்கள் நலனுக்கான பல அரசியல் சீர்திருத்தங்களைச் செய்துவிட்டு குறுகிய காலத்திற்குள் பதவியிலிருந்து (6முதல்18 மதங்கள் வரை) ஒதுங்கிக் கொள்வேன் என்றும் சேபித்த தேரர் அந்தக் கூட்டத்தில் பேசி மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தார்.
பின்னர் தேரரும் சந்திரிக்கா அம்மையாரும் தற்போதய ஜனாதிபதி மைத்திரியை அதிரடியாக வேட்பாளராக கொண்டு வந்து நிறுத்தினார்கள். ரணிலும் வேறுவழியின்றி அதனை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. எனவே சோபித்த தேரரின் நியாயமான சமூகத்தை முன்னெடுக்க சத்தியம் செய்து பதவிக்கு வந்த மைத்திரி, சோபித்த தேரரின் இரண்டாவது நினைவுப் பேருரையில் எரிமலையாக அந்த அரங்கில் சீறிப்பாய்ந்ததில் எந்தத் தவறும்கிடையாது என்பதுதான் கட்டுரையாளன் கருத்து.
ஜனாதிபதி மைத்திரி பற்றி முன்பொருமுறை இப்படி ஒரு குறிப்பை நாம் சொல்லி இருந்தோம் இந்த நல்லாட்சியை முன்னெடுப்பதில் தான் எதிர் நோக்கிய நெருக்கடியை அவர் என்றாவது ஒரு நாள் இந்த நாட்டு மக்களுக்கு சொல்லி அழுவார் என்று எழுதி இருந்தோம். அது இந்தளவு விரைவில் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
இப்போது மைத்திரி கடும் தொனியில் பேசியது, அதன் பின்னணி, எதிர் விளைவுகள் என்று சில தகவல்களை வாசகர்களுக்குச் செல்கின்றோம்.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த மூன்றே மாதங்களில் பெரிய மோசடியைச் செய்து நல்லாட்சியின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார்கள். கடந்த கால மோசடி ஊழல்கள் பற்றிய குறைகளைக் கூறி பதவிக்கு வந்த நாம் இப்படி நடந்து கொள்வது என்ன நியாயம்.? முன்னைய அரசாங்கத்தின் மோசடிக்காரர்ளை நீதி தண்டிக்க முனைவது போல், இந்த நல்லாட்சியிலுள்ள மோசடிக்காரர்களையும்-கள்வர்களையும் தண்டிக்க வேண்டும். அதில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது. இதில் வேறுபாடுகள் இருப்பின் அது பற்றி மக்கள் கேள்விகளை எழுப்புவது நியாயமானதே என்று மைத்திரி அங்கு பலத்த கரகோஷத்துக் மத்தியில் பேசினார்.
நியாயமான சமூகத்தைப் பற்றியே சோபித்த தேரர் பேசினார் அவர் பேச்சுக்கு முரனாக மோசடிக்காரர்களை என்னால் பாதுகாக்க முடியாது. அப்படி நான் நடந்து கொண்டால் எனக்கு அவர் சபிப்பார். தேரரின் ஆத்மா பிணைமுறி விவகாரத்தில் நான் நடந்து கொண்டது – ஆணைக்குழு அமைத்தது சரி என்று ஆசிர்வதிக்கும். இது நல்லாட்சியில் இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் பேசி இருக்கின்றார்.
ஊடகங்களையும் ஊடகக்காரர்களையும் நல்லாட்சியில் இருக்கின்ற சிலர் விலைக்கு வாங்கி எனக்கு எதிராக சேறுபூசி, சதி செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கு சில விடயங்களைப் பகிரங்கமாக பேச முடியாது. ஓரளவுக்குத்தான் என்னால் இது பற்றிப் பேச முடியும் என்றார் மைத்திரி. எனவே நல்லாட்சியில் நிறையவே குழப்பங்கள் என்று தெரிகின்றது.
ஊடகத்தையும் ஊடகக்காரர்களையும் பணம் கொடுத்து வாங்கி இருக்கின்றார்கள் என்று அவர் குற்றம் சாட்டி இருக்கின்றார். ஜனாதிபதி இப்படிக் குற்றம் சாட்டுகின்றவர்கள் யார் என்பதனை நாம் இந்த பிணை முறை விவகாரம் தொடர்பில் எழுதிய கட்டுரைகளில் பல இடங்களில் முன்பு பெயர் கூறிச் சொல்லி இருக்கின்றோம்.
வெளிநாட்டில் இருந்து செயலாற்றுகின்ற இணையம் பற்றி மைத்திரி பெயர் கூறாமல் பேசினார். அது புகழ்பெற்ற லங்கா ஈ நியூஸ் என்று நாம் பகிரங்கமாகக் கூறுகின்றோம். மைத்தரி கூற்று யதார்த்தமானது இந்தப் புகழ் பெற்ற இணையம் பிணைமுறி விவகாரத்தில் ரவிக்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தையேனும் எழுதவில்லை. இது புதிராக இருக்கின்றது. இன்று இந்த இணையத்தை அரசு முடக்கி இருக்கின்றது என்று குற்றம்சாட்டப்படுகின்றது.
நல்லாட்சியில் இருக்கின்ற தனக்கு எதிராக சேறுபூசுகின்ற ஒரு குழு பற்றியும் மைத்திரி பேசி இருக்கின்றார். அவருக்கு இவர்களது நாமத்தை நேரடியாக சொல்ல முடியாமல் இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரி இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருனாநாயக்காவைப் பற்றியே கூறுகின்றார் என்பது இந்த நாட்டில் அரிச்சுவடி படிக்கின்ற சிறு பிள்ளைகூட நன்கு அறியும் எனவே அந்த நாமத்தை இங்கு நேரடியாகச் சொல்வதில் எந்தத் தயக்கத்தையும் நாம் காட்டத் தேவையில்லை. அத்துடன் பிணைமுறி விவகாரத்தில் ரவியின் இவ்வாறான செயல்பாடுகள் பற்றி நாம் நிறையவே கடந்த காலங்களில் சொல்லி வந்திருக்கின்றோம்.
மேலும் நல்லாட்சியில் இருக்கின்ற தனக்கெதிரான குழு பற்றியும் மைத்திரி பகிரங்கமாக சொன்னாலும் எந்தக் குழு என்று அங்கு சொல்லவில்லை. அது பற்றி நாம் இப்படி மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறோம்.
ரவி நிதி அமைச்சராக இருந்த நாட்களில் தனக்கு விசுவாசமான ஒரு குழுவை எப்போதும் தன்னுடன் வைத்திருந்தார். அவர்களுக்கு தனது அமைச்சினுடாக அவர் மாதாந்தம் பணத்தை கொடுத்து அவர்களைத் தனக்கு விசுவாசமாக வழி நடாத்தி வந்தார். அந்தக் குழுதான் மைத்திரி குறிப்பிடுகின்ற இந்தக்குழு. சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் ரவிக்கு ஒரு கனதியான அமைச்சை மீண்டும் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரியிடம் போய் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவினர் சில தினங்களுக்கு முன்னர் தென் பகுதி ஹோட்டலொன்றில் சந்திப்பை நடாத்தி மைத்திரியை கடுமையாக விமர்சித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தை மைத்திரி ரணிலிடம் கூற கட்சியில் குழுக்களை உருவாக்கி பிரச்சினைகளை உண்டு பண்ண வேண்டாம் என்று ரணில் ரவியிடத்தில் கேட்டிருக்கின்றார்.!
இது வெறும் பம்மாத்து கட்டளை. ரவி விவகாரத்தில் ரணில் துணிச்சலுடன் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்பதனை நாம் பொறுப்புடன் இங்கு பதிகின்றோம். பிணை முறிவிவகாரத்தில் பிரதமர் ரணிலை நன்கு சிக்கவைத்திருக்கின்றார் ரவி. இதற்கு புறம்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் விவகாரத்தில் புதியதோர் தகவலையும் நாம் முதல் முறையாக இங்கு தருகின்றோம்.
இந்த அர்ஜூன் மஹேந்திரவை மத்திய வங்கி ஆளுனராக நியமனம் செய்ய வேண்டும் என்ற சிபார்சை ரணிலுக்கு முன்வைத்ததே இந்த ரவி கருனாநாயக்கதான். எனவே பினைமுறி விவகாரத்தில் நடந்த பகற் கொள்ளை முன்கூட்டியே திட்டமிட்ட ஏற்பாடே. ரவிக்கு எதிரான பிரதமர் ரணிலின் நடவடிக்கை என்பது எல்லாம் வெரும் கண்ணாம் பூச்சி விளையாட்டுத்தான்.
பினைமுறி விவகாரத்தில் முதலில் ரணில் தனக்கு விசுவாசமானவர்களை வைத்து ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார். அந்த ரணில் விசுவாச விசாரணைக்குழு எந்தத் தவறும் நடக்க வில்லை என்று சொல்லிவிட்டது. இது நாட்டில் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. கோப் கமிட்டி தவறு நடந்திருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தியது. ஜனாதிபதி இது தொடர்பாக ஆணைக்குழுவை அமைத்து இதுவிடயத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பதனை கண்டறிய முற்பட்டார்.
மிக மோசமான மோசடிகள் அங்கு நடந்திருப்பது அம்பலத்துக்கு வந்தது. அமைச்சர் ரவி அமைச்சர் பதவியிலிந்து துரத்தப்பட்டார் அல்லது ஒதுங்கிக் கொள்ள வேண்டி வந்தது.
ஜனாதிபதி இது விடயத்தில் விசாரனைக் குழு அமைப்பதை ரணில் விரும்பவில்லை. என்றாலும் நாட்டில் பிணைமுறி விவகாரம். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், ஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு இப்போது பிரதமரையே விளக்கம் தருமாறு கட்டளையிட்டிருக்கின்றது.
எனவே நல்லாட்சியை முன்னெடுப்பதில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முரண்பாடுகள் இருந்தாலும் அவை தீர்த்துக் கொள்ளக்கூடியது என்று சராசரி குடிமக்கள் கருதுகின்றார்கள். ஆனால் இந்த மோதல் அபாயகரமான கட்டத்திற்கு வந்திருக்கின்றது என்பதுதான் எமக்குக் கிடைக்கின்ற தகவல்கள் சொல்கின்றன.
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ரணிலும்-மஹிந்தவும் இணைந்து ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வந்தாலும் ஆச்சியப்படுவதற்கில்லை. வருகின்ற உள்ளுராட்சித் தேர்தல் நிலமையை மேலும் மோசமாக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. எமது அவதானப்படி விரைவில் நாட்டில் மிகப் பெரிய அரசியல் நெருக்கடி நிலையொன்றுக்கு வாய்ப்பிருக்கின்றது.
