அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண, துறவியர், இமாம்களுடன், ‘வாழும் கலை’ அமைப்பைச் சேர்ந்த, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பேச்சு நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பெங்களூரை தலைமையிடமாக வைத்து, ‘வாழும் கலை’ என்ற அமைப்பை, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ‘வாழும் கலை’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:அயோத்தி பிரச்னைக்கு தீர்வு காண, ஏற்ற சூழ்நிலை நிலவுவதை, பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, ரவிசங்கர் விரும்புகிறார்.
இரு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றாக பேசி, பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, விரும்புகிறார்.இது தொடர்பாக,துறவியர் மற்றும் இமாம்களுடன், ரவிசங்கர் பேசி வருகிறார். எந்த அரசின் சார்பாகவோ, அமைப்பின் சார்பாகவோ, இந்த பேச்சை, அவர் நடத்தவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே, இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காண, முயற்சித்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.