பலோங்காலி, தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் நிகழ்ந்து வரும் தாக்குதல்களை அடுத்து, ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த, 10 லட்சம் முஸ்லிம்கள், வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில், 20 ஆயிரம் பெண்கள் கர்ப்பமாக உள்ளனர். 600 பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இதுவரை அகதிகளாக வந்தவர்களுக்கே, தங்க இடம் இல்லாத நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகுவதை கட்டுப்படுத்த முடியாமல், வங்கதேச அரசு திணறி வருகிறது.
இந்நிலையில், ரோஹிங்கியா முஸ்லிம்கள் தஞ்சம் புகுந்துள்ள, காக்ஸ்பஸர் மாவட்டத்தில், குடும்பக்கட்டுப்பாடு திட்ட தலைவர், பின்டுகந்தி கூறியதாவது:
வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா இனத்தவரின் குடும்பங்கள் பெரியதாக உள்ளன. பலருக்கு, 15 – 20 குழந்தைகள் உள்ளனர். ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியருடன், ரோஹிங்கியா ஆண்கள் குடும்பம் நடத்துகின்றனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் அளிக்க முடியாத நிலையில், அரசு உள்ளது. எனவே, ஆண்களுக்கு, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி, அரசை வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.