சோபியா எனும் பெயருடைய பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளமையானது பல்வேறு தரப்பிலும் விநோதமான செய்தியாகப் பார்க்கப்படுகின்றது.
இந்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றது.
இந்த ரோபோ ஊடகங்களுக்கு பேட்டியளிக்கையில்,
“என்னை ஒரு தனித்துவத் தன்மையுடன் சிறப்பாக உருவாக்கியதற்கு பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன். மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் முக்கியத்துவம் வாய்ந்த ரோபோவாக மாறுவேன்” என கூறியுள்ளது.
உலக வரலாற்றில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த ரோபோ ஹொங்கொங்கிலுள்ள ஹன்சென் ரொபோடிக் கம்பனியினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி ரியாதில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில் (FII) இந்த ரொபோ உரையாற்றியுள்ளது. இதனையடுத்தே இந்த ரோபோவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக சவுதி அறிவிப்புச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது