யாழ்ப்பாணத்தின் கழிவுகளைக் கொட்டும் இடமான கல்லுண்டாய் குப்பை மேடு திடீர் திடீரெனத் தீப்பற்றி எரிகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்வால் அந்தப் பகுதி மக்களும் அதன் வழியே பயணம் செய்பவர்களும் அச்சமடைந்துள்ளனர்.
இரவில் பயணிப்போர் மேலும் கலங்கிப் போகின்றனர். குப்பைகள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் அளவுக்கதிகமான மீதேன் வாயுவே தீ எரிவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
‘‘அதிகரித்த வெப்பம் காரணமாக குப்பைகளிலிருந்து வெளியேறும் உயிர் வாயுவால் தீ மூழ்கிறது’’ என்று யாழ். மாநகரச சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.யாழ். மாநகர சபையே கல்லுண்டாயில் குப்பைகளைக் கொட்டி வருகின்றது.
கடந்த ஏப்ரலில் மீதெட்ட முல்லவில் குப்பைமேடு சரிந்து 26 பேர் உயிரிழந்தனர். அந்தக் குப்பை மேட்டில் மீதேன் வாயு அதிகரித்து, அது இடையில் தீப்பற்றி எரிந்ததாலேயே சரிந்து விழுந்து பேரிடர் ஏற்பட்டது என்று ஆய்வுகள் பின்னர் தெரிவித்தன.
கல்லுண்டாய் வெளிக்கு அண்மையில் குடியிருப்புக்கள் இல்லாவிடினும் அந்தப் பகுதியால் தினமும் பல நூற்றுக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர்.
மீதெட்டமுல்ல பேரிடரின் பின்னர் அங்கு ஆய்வு மேற்கொண்ட ஜப்பான் வல்லுநர்கள், குப்பை மேட்டுப் பகுதியில் அளவுக்கதிகமான மீதேன் வாயு காணப்படுவதாகவும் அது ஆபத்தானது என்றும் தெரிவித்திருந்தனர்.
மெதேன் வாயுவின் அளவானது சாதரணமாகக் காற்றில் 0.5 வீதம் காணப்படும். அது 1.5வீதம் வரை சராசரியாக அதிகரிக்கும்.
எனினும் மீதெட்டமுல்ல குப்பை மேட்டில் மீதேன் வாயுவின் அளவானது 16 வீதமாக இருந்தது. மலசலக் கழிவுகளும் குப்பை மேட்டில் கொட்டப்படுவதே மீதேன் வாயுவின் அளவுக்கதிகமான அதிகரிப்புக்குக் காரணம் என்றும் ஜப்பான் வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர்.
யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் தனியார் நிறுவனங்களால் யாழ்ப்பாண மாநகரிலுள்ள குடியிருப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் அகற்றப்படும் மலசலகூடக் கழிவுகளும் கல்லுண்டாய் குப்பை மேட்டுப் பகுதியிலேயே கொண்டப்படுகின்றன.
இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளும் கல்லுண்டாயில் கொண்டப்பட்டு எரிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி மறுத்தார்.
‘‘போதனா மருத்துவமனைக் கழிவுகள் கல்லுண்டாய் வெளியில் கொழுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது.
போதனா மருத்துவமனையில் தினமும் சேதனக் கழிவுகள் 500 கிலோ தொடக்கம் 600 கிலோ வரையில் சேர்கின்றன. அதனை நாம் தெல்லிப்பளையில் உள்ள புகை போக்கி மூலமே எரித்து அகற்றுகின்றோம்.
இதேபோன்று தினமும் உணவுக் கழிவுகள் இரண்டு உழவு இயந்திரம் சேர்கின்றன. அவையும் மாநகர சபையினருக்கு பணம் செலுத்தி அகற்றப்படுகின்றன.
அதேபோன்று சத்திரச் சிகிச்சை மூலம் அகற்றப்படும் மனித உடற்பாகங்கள் மற்றும் இறந்த சிசுக்கள் என்பன வாரம் ஒருமுறை மாநகர சபை மூலம் அகற்றப்பட்டுக் கோம்பயன் மயானத்தில் எரிக்கப்படுகின்றன.
அதற்கும் மாநகர சபைக்கு பணம் செலுத்தப்படுகிறது. இதுவே எமது கழிவகற்றல் முறமையாகும்’’ என்று மருத்துவர் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
குப்பை தொடர்ந்து இரவு பகலாக எரிவதால் எழும் புகை நவாலி வரை பரவி குடியிருப்புகளைப் பாதிக்கின்றது என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.