போர் குற்றங்களுக்காக சீருடை அணிந்த எவரையும் தண்டிக்க இடமளிக்க மாட்டேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி சூளுரைத்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணையின் மூலம் நீதியை எதிர்பார்க்க முடியுமா என வட மாகாண முதலமைச்சரான சீ.வி.விக்னேஸ்வரன் சர்வதேச சமூகத்திடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் இறுதிக்கட்ட போரின் போது ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்கள் உட்பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான நீதி விசாரணையொன்றின் ஊடாக மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருவதாகவும் வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் பேரவை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடத்திய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வட மாகாண முதலமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ் மக்கள் பேரவை இன்றைய தினம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமொன்றை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியது.
இதில் கலந்துகொண்ட அந்த அமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வசரன், தமிழ் மக்கள் பேரவை இரண்டு பிரமாண்டமான “எழுக தமிழ்” கூட்டங்களின் பின்னர் கும்பகர்ணன் போல் தூங்கப் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கமும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளி்த எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.
பதவிகளுக்கு ஆசைப்பட்டு தமது மக்களுக்கு எதிரானவர்களாக தற்போதைய தமிழ்த் தலைமைகள் மாறிவிடக்கூடாது எனவும் வட மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழர்களின் பெரும் மரியாதைக்குரிய சிங்களத் தலைவராக இருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா புதவி ஆசையால் 1972ஆம் யாப்பு உருவாக்கத்தின் போது தமிழர்களுக்கு எதிரானவராக மாரியதாகவும் அவர் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சலுகைகளை வழங்கி எதையும் சாதிப்பது தென்பகுதி மக்களுக்கு கைவந்த கலை எனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய தொடர்பில் அமைச்சர் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்தினை போர்க்குற்ற விசாரணைகளுக்கான ஆதாரமாக கொள்ள முடியுமெனவும் வலியுறுத்தினார்.