நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு வடக்கு மாகாண சபையில் இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதனை வடக்கு மாகாண சபை எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அதனைத் திருத்தங்களுடன் ஆதரிப்பதற்கான யோசனையை வடக்கு மாகாண சபை முன்வைக்கக் கூடும் என்றும் உறுப்பினர்களுக்கு இடையே பேசப்பட்டது.
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்டவரைவு மாகாண சபைகளின் கருத்துக்களை அறிவதற்காக அனுப்பப்பட்டது. வடமத்திய மாகாண சபை சட்ட வரைவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் தென் மாகாண சபைகளில் சட்டவரைவு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 20ஆவது திருத்தச் சட்டவரைவு வடக்கு மாகாண சபையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
20ஆவது திருத்தச் சட்டவரைவை எதிர்ப்போம் என்று மாகாண சபையில் வைத்துத் தெரிவித்திருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அதன் பின்பு ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில், காபந்து அரசு அமைக்க இடமளிக்கப்பட்டால் 20ஆவது திருத்தச் சட்டவரைவை ஆதரிக்கலாம் என்ற சாரப்பட குறிப்பிட்டிருந்தார்.
இதனால் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் குழப்பமான நிலமை காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை கட்சி உறுப்பினர்களிடம் தெரிவிக்கவில்லை. ஆதரிப்பதா? திருத்தங்களுடன் ஆதரிப்பதா? அல்லது எதிர்ப்பதா? என்பதில் முடிவெடுக்க முடியாத நிலையில் உறுப்பினர்கள் உள்ளனர்.
பெரும்பாலும் திருத்தங்களுடன் ஆதரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படலாம் என்று தெரிகின்றது. இதேவேளை, மாகாண சபைகள் திருத்தச் சட்டவரைவை தோற்கடித்தாலும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி நடைமுறைப்படுத்துவோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.