“போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் இலங்கைப் படையினர் மீது கைவைப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டுக்கோ, நபருக்கோ, அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது.
புலிச் சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவற்றின் நிழலாகச் செயற்படும் அரச சார்பற்ற அமைப்புகளின் தாளத்துக் கேற்ப நான் ஆடமாட்டேன்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததா வது:
முன்னாள் இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரிய மீது போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை பற்றிப் பேசப்படுகின்றது. இது கடல்தாண்டிய பிரச்சினையாகும். ஜெகத் ஜயசூரிய மீதோ படைத்தளபதிகள் மீதோ அல்லது எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கை வைப்பதற்கு எந்தவொரு வெளிநாட்டுக்கும், நபருக்கும், அமைப்புக்கும் இடமளிக்கமாட்டேன் என்பதை திட்டவட்டமாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.
புலிகளிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு அதன் கைக் கூலியாகச் செயற்படும் சில அரசசார்பற்ற நிறுவனங்களே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன. அவற்றின் தாளத்திற்கேற்ப ஆடுவதற்கு நான் ஒருபோதும் தயாரில்லை.
எதற்காக கூட்டு அரசு?
கூட்டு அரசில் சுதந்திரக் கட்சி அங்கம் வகிக்கும் வரையில் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று சில தரப்பினர் அறிக்கை விடுத்துள்ளனர். ஊஞ்சலாடுவதற்காகவோ அல்லது சங்கீத கதிரை விளையாட்டு விளையாடுவதற்காகவோ சுதந்திரக் கட்சி கூட்டு அரசில் இணையவில்லை.
பன்னாட்டு நெருக்கடி, பொருளாதாரப் பிரச்சினை ஆகியவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே கூட்டு அரசு அமைக்கப்பட்டது.
முன்கூட்டியே அரச தலைவர் தேர்தலை நடத்தவேண்டாமென அப்போதைய எனது தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் அறிக்கையொன்றை கையளித்திருந்தேன்.
6 விடயங்களை அதில் சுட்டிக்காட்டியதுடன், நாட்டில் அரசியல் மறுசீரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தவேண்டும் எனவும் எடுத்துரைத்தேன்.
பன்னாட்டு நெருக்கடி, கடன்சுமை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அவர் எவரினதும் கருத்துக்கு செவிமடுக்காமல் முன்கூட்டியே தேர்தலை நடத்தி அதில் தோல்வியடைந்தார்.
அந்தச் சுமைகள் எமது தோள்களுக்கு வந்தன. அவற்றை எதிர்கொள்வதற்காகவே இரண்டு முதன்மைக் கட்சிகளும் இணைந்தன.
வழங்கப்பட்ட சனநாயகம், சுதந்திரம்
தவறாகப் பயன்படுத்தப்படுகிறது
கடந்த ஆட்சியின்போது நாட்டிலும், கட்சிக்குள்ளும் சனநாயகம் இருக்கவில்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாட்டிலும், கட்சிக்குள்ளும் சனநாயகம் ஏற்படுத்தப்பட்டது.
இருந்தும் வழங்கப்பட்டுள்ள சனநாயகத்தை சுதந்திரத்தை சிலர் சரியாகப் பயன்படுத்துவதில்லை. அதைமீறும் வகையில் செயற்படுகின்றனர்.
எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. முகநூல் இணையத்தில் விமர்சனங்கள் என்று அது தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. கட்சிக்குள்ளும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை விமர்சிப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும் – என்றார்.