ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படும் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவிய போதே பிரதி அமைச்சர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ சுதந்திரக் கட்சியும் இலங்கையின் இரு பிரதான கட்சிகளாகும். இரு கட்சிகளும் நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. இதன்போது இரு பிரதான கட்சிகளுக்கிடையில் பல பரஸ்பர கொள்கையும் நிலவுகின்றன. கருத்து வேறுபாடுகனும் நிலவின.
முன்னைய தேர்தல்களின் போது இரு பிரதான கட்சிகளும் முரண்பட்டு கொண்டும் தாக்குதல் நடத்தி கொண்டும் இருந்தன. இதனால் பல உயிர்கள் பிரிந்தன. உடைமைகள் பல அழிந்தன.
எனினும் வரலாற்றில் முதற்தடவையாக இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடனே நாம் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவினோம். நாம் நினைத்திருந்தால் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த உடனே பாராளுமன்ற தேர்தல் நடத்தி தனிக்கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருப்போம். எனினும் 100 நாள் வேலைத்திட்டத்தின் காரணமாக இதனை செய்யவில்லை.
அதுமாத்திரமின்றி பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த கையோடு எதிரணியில் இருந்து பலரை இணைத்து கொள்ள எமக்கு முடிந்திருந்தும் நாம் செய்யவில்லை. பலர் வருகை தருவதற்கு தயாராக இருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசனே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய அரசாங்கம் வெற்றிகரமாக இரு வருடத்தை கடந்துள்ளது. அத்துடன் இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளன.
இந்த ஒப்பந்தம் நிறைவடைந்தமை தொடர்பில் பலர் எத்தகைய கருத்துகளை கூறினாலும் தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும். 2020 ஆம் ஆண்டு வரைக்கும் ஆட்சி தொடர்ந்து பயணிக்கும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வும் ஒப்பந்தம் அடுத்த மாதம் நிறைவடையவுள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு கைச்சாத்திடப்படும் .