ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘2.0’ வீடியோ பதிவுக்கு, தமிழ் திரையுலகினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கும் படம் ‘2.0’. இந்தியாவில் 3டி ஒளிப்பதிவில் தயாராகும் முதல் படம், பெரும் பொருட்செலவு, ரஜினி – அக்ஷய்குமார் இணைப்பு, ஷங்கர் இயக்கம் உள்ளிட்டவையே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
தமிழில் தொடங்கப்பட்ட இப்படத்தை இந்தியா மட்டுமன்றி பல்வேறு உலக மொழிகளிலும் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா முடிவு செய்துள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதுவரை பணிபுரியும் போது எடுத்த புகைப்படங்களை மட்டுமே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்த இயக்குநர் ஷங்கர், விநாயகர் சதுர்த்தி அன்று படம் உருவான விதம் வீடியோ வடிவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று (ஆகஸ்ட் 25) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
இதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகினரும் இது தான் உண்மையான ஹாலிவுட் தரம் என்று குறிப்பிட்டு ‘2.0’ வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். பிரம்மாண்டமான அரங்குகள், கார்கள் வெடிக்கும் காட்சிகள், விளையாட்டு மைதானத்தில் சண்டைக்காட்சிகள், ரோபோக்கள் உருவான விதம், ரஜினி – அக்ஷ்யகுமார் இருவருடைய மேக்கப்பிற்கான மெனக்கிடல் ஆகியவை அந்த வீடியோவில் அடங்கியுள்ளது.
நீரவ் ஷா ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு, வெளிநாட்டு சண்டைப் பயிற்சியாளர்கள் என படக்குழுவினர் மெனக்கிடல் மற்றும் அசுர உழைப்பு இந்த வீடியோ பதிவின் மூலமாக வெளியுலகிற்கு காட்டியுள்ளார்கள்.
2018-ம் ஆண்டில் ஜனவரி 25-ம் தேதி வெளியாகவுள்ள ‘2.0’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இறுதிப்பாடலை காட்சிப்படுத்த அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
