நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று முதல் பெய்துவரும் கடும் மழையி னால் சில மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் அறிவித்துள்ளது.
மாத்தறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் களுத்துறை மாவட்டத்திற்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே மண் சரிவு அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும் பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான
இடங்களில் தங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த எச்சரிக்கை 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்குமென்றாலும் தொடர்ந்து மழைபெய்தால் அவ்வெச்சரிக்கை நீடிக்கும்.
இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதிப் கொடிப்பிலி கருத்து தெரிவிக்கையில், இரத்தினபுரி, நுவரெலியா உட்பட மத்திய மலைநாட்டின் சில பிரதேசங்களிலும் களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களிலும் தற்போது மழையுடன்கூடிய காலநிலை நிலவுகிறது.
எனவே தேசிய கட்டிட ஆய்வு மையம் தற்போதைக்கு இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் களுத்துறை மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஆகவே “குகுளே” கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் வான் கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளது. எனவே களுத்துறை, இங்கிரிய மற்றும் புளத்சிங்கள பிரதேச மக்கள் அவதானமாக இருந்துகொள்ள வேண்டும் என்றார். .
