மகிந்த அணியுடன் கை கோர்த்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றும். இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனக் கூட்டம் அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இங்கு இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
பதவிக்காலம் நிறைவடையும் கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளினதும் ஆயுள் காலத்தை நீடிக்காது அதனைக் கலைத்து விட்டு மாகாண சபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
நாங்கள் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலுக்கு தயாராக வேண்டும். இந்தத் தேர்தலானது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மிகுந்த சவால் மிக்கதாக அமையும். சவால்களை முறியடித்து எவ்வாறு வெல்வது என்பது குறித்து நாங்கள் இப்போதே ஆராய வேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த அணி – மைத்திரி அணி என்று பிரிந்துள்ளமை இரு தரப்பு முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் பாதிப்பாக அமையும். நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளால் வடக்கு– – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவது என்பது கடினமானதாகும்.
கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் முதல் இரண்டு மாகாண சபைகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கைப்பற்றியது. துரதிர்ஷ்டவசமாக தற்போது அதிகமான ஆசனங்களை நாங்கள் வைத்திருந்தும் எதிர்க்கட்சியிலேயே அமர்ந்துள்ளோம்.
சவால்கள் நிறைந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வியூகங்களையும் – கலந்துரையாடல்களையும் நாங்கள் முடுக்கி விட்டுள்ளோம். கிழக்கு மாகாணத்தில் மகிந்த அணி – மைத்திரி அணி என்று பிளவுபட்டு போட்டியிடப்போவதில்லை.
அவ்வாறு போட்டியிட்டால் அது எமக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இரு அணிகளையும் இணைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது சம்பந்தமாக ஆராய்ந்து வருகின்றோம் – –என்றார்.