இந்த வார இறுதியில் இலங்கை வரும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளது. இதற்காக, 17 ஆண்டுகளாகக் கைவிடப்பட்டுக் கிடந்த நினைவிடம் தேடிப் பிடித்துத் துப்புரவு செய்யப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினரின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியிலேயே அதிகாரிகள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
1987 முதல் 1989 வரையான காலத்தில் அமைதி காப்புப் படையாக வந்தது இந்திய இராணுவம். பின்னர் ஆக்கிரமிப்புப் படையாக மாறியது. சொல்லொணாக் கொடுமைகளை இழைத்தது. பெண்கள் வன்புனரப்பட்டனர்; அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்தக் காலப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணு வத்தினர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
அவ்வாறு கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினர் சிலருக்கு கல் வியங்காடு இராச பாதையில் பிடாரித் தோட்டம் பகுதியில் சிறிய நினை வுத் தூபி ஒன்று கட்டப்பட்டுள்ளது. தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலேயே அனுமதி இன்றி அந்தத் தூபி அமைக்கப்பட்டுள் ளது.
இப்போது அந்தத் தூபியைத் தேடிக் கண்டறிந்துள்ள இந்திய இரா ணுவத்தினர் அதில் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்காக அந்த இடத்தைத் துப்புரவு செய்யும் ஏற்பாடுகள் இலங்கை இராணுவத் தினரால் முன்னெடுக்கப்பட்டது.
17 ஆண்டுகளின் பின்னர் அந்தத் தூபியைச் சுற்றி பகுதி துப்புரவு செய்யப்படுகிறது.
பலாலி இராணுவ முகாமிலிருந்து கல்லறை அமைந்துள்ள இடத்துக்கு நேற்று வந்த இராணுவத்தினர் 4 பேர், காணி உரிமையாளருடன் கலந்துரையாடினர். இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் வரவுள்ளனர், எனவே இந்த இடத்தைத் துப்புரவு செய்யவுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் குழு இரு நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளது. நாளை மறுதினம் சனிக் கிழமை கொழும்புக்கு வரும் இந்தக் குழு ஞாயிற்றுக் கிழமை மாலையே இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.
இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப் பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் பலர், இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.
கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக பகிரங்கமாக எந்தவொரு அஞ்சலி நிகழ்வுகளையும் எந்தத் தரப்புக்களும் ஏற்பாடு செய்வதில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. இந்திய இராணுவத்தினரால் மிலேச்சதனமாக கொல்லப்பட்ட யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஊழியர்களுக்கு மாத்திரமே, மருத்துவமனை நிர்வாகம் அஞ்சலி செலுத்தி வருகிறது.