முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர்களான யோஷித்த, ரோஹித்த ராஜபக்ச ஆகியோர் மீது இன்று முதல் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இதற்கமைய இன்றைய தினம் ஷிரந்தி ராஜபக்ச கொழும்பிலுள்ள குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.
பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற ஜீவ் வண்டியை வழங்கிய விவகாரம் தொடர்பாகவே அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை யோஷித்த ராஜபக்சவை நாளைய தினம் விசாரணைக்கு வருமாறு குற்றவியல் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கிறது.
வசீம் தாஜுடீனின் படுகொலை விவகாரம் தொடர்பாக இவரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.
அவரது சகோதரரான ரோஹித்த ராஷபக்ச நாளை பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்கவுள்ளார்.
கடந்த சில வருட ங்களுக்கு முன்னர் சீனாவிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்ட ஸ்ரீலங்காவுக்குச் சொந்தமான சுப்ரீம் செற் செய்மதி விவகாரம் தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த செய்மதி விண்ணுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், அதன் பின்னர் அதுகுறித்த தகவல்கள் எதுவும் வௌயாகவில்லை. அப்போது அந்த செய்மதி தொடர்பான குழுவில் ரோஹித்த ராஜபக்சவுகம் அங்கம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.