பர்கினா பசோ நாட்டில் பயங்கரவாதிகள் உணவகத்துக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 18 பேர் பலி உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பர்கினா பசோவின் தலைநகரான குவாகடவ்கவ் நகரில் அமைந்துள்ள அசிஸ் இஸ்தான்புல் என்னும் துருக்கிய உணவகம் குறி;த்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த உணவகத்தின் உட்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு 60-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
இதன்போது குறித்த உணவகத்திற்கு பயங்கரவாதிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில் தாங்கள் மறைத்து வைத்திருந்த எந்திர துப்பாக்கிளை எடுத்து உணவகத்தின் வெளிப் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இந்த திடீர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகள் பலரை பிணைக் கைதியாகவும் பிடித்து வைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் குறித்த தகவலை அறிந்துகொண்ட அந்நாட்டு அதிரடிப்படை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குற்றவாளிகளை சுற்றிவளைத்தது.
இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள் 2 பேரையும் அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பர்கினா பசோ நாட்டில் ஐ.எஸ். அல்கொய்தா உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுக்கள் அண்டை நாடான மாலி அருகே வடமேற்கு எல்லையில் செயல்படுகின்றன.
இவர்கள் பர்கினா பசோவில் தாக்குதல் நடத்திவிட்டு மாலிக்கு தப்பி சென்று விடுவது வழக்கம்.நேற்றைய தாக்குதலை எந்த பயங்கரவாத இயக்கம் நடத்தியது என்பது பற்றி உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை.
மேலும் இதுவரை தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத குழுவும் பொறுப்பு ஏற்கவும் இல்லை.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குவாகடவ்கவ் நகரில் இதேபோல் இன்னொரு உணவகத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.