மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கிய உடன்பாடு கிழித்தெறியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உடுகம்பொலவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
“மகிந்த ராஜபக்ச அரசுத் தலைமையைப் பொறுப்பேற்றதும், அம்பாந்தோட்டை துறைமுகம் மீண்டும் மக்கள் மயப்படுத்தப்படும்.
வடக்கு- கிழக்கு இணைப்பு ரத்துச் செய்யப்பட்டது போலவே, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடும் ரத்துச் செய்யப்படும்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட ஜூலை 29ஆம் நாள் ஒரு தேசிய துக்க நாள் ஆகும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தங்காலை இல்லத்தில் நேற்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, ஜூலை 29ஆம் நாளை ஒரு துரதிஷ்டமான நாள் என்று குறிப்பிட்டார்.
“இந்திய- சிறிலங்கா உடன்பாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ழைகயெழுத்திட்டு, 30 ஆவது ஆண்டில், அதே நாளில் அவரது மருமகன் மாகம்புர துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டமை துரதிஷ்டமானது.
ஜூலை 29ஆம் நாளில் பல துர்நிகழ்வுகளை நாடு கண்டிருக்கிறது.” என்று கூறினார்