அமெரிக்காவின் குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி கடந்த ஆண்டு யூன் 3 ஆம் திகதி காலமானார். அவரது வாள்நாளில் அவர் வாங்கிய குத்துகளின் எண்ணிக்கை 29 ஆயிரம் என கூறப்படுகிறது.
முகமது அலியின் முதல் நினைவு தினத்தை முன்னிட்டு கென்ட்டகி மாகாணத்தில் அவர் வாழ்ந்த வீடு புனரமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அந்த வீடு முகமது அலியின் புகைப்படக் காட்சியகமாக மாற்றப்பட்டது. அப்போது முதல் இதுவரை 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர்.
முகமது அலி 1960 முதல் 1981 வரை தொழில் முறையாக 61 போட்டிகள் உட்பட பல குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
1984ல் நடைபெற்ற ஒரு விழாவில் தான் வாங்கிய பஞ்ச்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது ‘இன்று நான் மெதுவாகப் பேசுகிறேன் என மக்கள் சொல்கிறார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் நான் வாங்கிய குத்துகள் அத்தனை.
இதுவரை விளையாடிய போட்டிகளில் வாங்கிய குத்துகளை எண்ணி வந்திருக்கிறேன். 29 ஆயிரம் குத்துகள் மொத்தம். ஆனால் அதற்காக எனக்குக் கிடைத்த வருமானம் 57 மில்லியன் டொலர்’ என்றார் முகமது அலி.
குத்துச்சண்டையின் போது, பலமுறை தலையில் அடிபட்டதால், முகமது அலிக்கு தலையில் ரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் தாக்கியது.
கடந்த 2013 ஆம் ஆண்டு கடும் உடல்நலைக் குறைவால் பாதிக்கப்பட்ட அலி, ஓரிரு மாதங்கள் கூட தாங்கமாட்டார் என மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், அதையும் தாண்டி வந்தார் அலி.
அடுத்தடுத்த ஆண்டுகளில் நிமோனியா பாதிப்பு. சிறுநீரகக் கோளாறு, என பல நோய்கள் அலியை வதைத்தன. இதனையடுத்து யாராலும் வெல்ல முடியாத முகம்மது அலியை மரணம் வென்றது கடந்த ஆண்டு இதே யூன் 3 ஆம் திகதி தான்.