கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் இன்று 38 ஆவது நாளாகவும் இடம்பெற்றது.
இந்த நிலையில் கடற்படையினர் வசமுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் காணிகள் விடுவிப்பது குறித்து உயர் மட்ட கலந்துரையாடல் இன்று காலை முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் அவசர கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இரு வாரங்களுக்குள் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
எனினும் இன்றைய தினம் கடற்படை தளபதி முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு விஜயம் செய்து அவசர கலந்துரையாடலை நடத்தி இறுதியாக முள்ளிக்குளம் மக்களின் காணிகள் இன்று முதல் அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முள்ளிக்குளம் மக்கள் இன்று முதல் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியும் என கடற்படைத்தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும் மக்கள் நாளை முள்ளிக்குளம் ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த பின் தமது சொந்த நிலங்களில் குடியமரவுள்ளனர். மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்த போராட்டம் வெற்றியளித்துள்ளது.
இதேவேளை மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை முள்ளிக்குளம் காணி விடுவிப்பிற்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தார். அவரின் முயற்சியும் வெற்றியளித்துள்ளது.
முள்ளிக்குளம் மக்களின் காணி விடுவிப்பிற்கு துரித முயற்சிகளை மேற்கொண்ட கடற்படை தளபதிக்கு மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
முள்ளிக்குளம் காணி விடுவிப்பிற்கு ஜனாதிபதி முழுமையாக செயற்பட்டதுடன், மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவசர கூட்டத்தை கடந்த வாரம் கூட்டியதன் பலனாகவே வெற்றி கிடைத்துள்ளது.
தற்போது முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள சொந்த நிலத்தில் மீள் குடியேறவுள்ள மக்களுக்கு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தற்காலிக வீடுகள் அமைப்பதற்கான உதவிகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளார் என செல்வம் அடைக்கலநாதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் இடம் பெற்ற அவசர கலந்துரையாடலில் முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் அன்ரன் புனித நாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.