திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்.. அதனை நிறைவேற்றாத தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் முறையிட்டுள்ளார்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் அடங்கிய அமர்வு- இடைக்கால உத்தரவாக இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீப திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவேண்டும் என தமிழக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும் இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் – இதற்கான மேற்பார்வை ஒருங்கிணைப்பு அலுவலராக செயல்படுவார் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் கார்த்திகை தீப திருநாளான நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் ஏராளமான இந்து மக்களும்- பொதுமக்களும்- ஏனைய மத மக்களும்- அரசியல்வாதிகளும் – காவல்துறையினரும் குவிந்தனர்.
இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருநாளான நேற்று திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக பாரம்பரியமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபத்தூணில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழிகாட்டிய – இடைக்கால உத்தரவிட்ட மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதனால் இந்து மக்களிடத்திலும்.. பொது மக்களிடத்திலும் பாரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதி அரசர்கள் அடங்கிய அமர்வு முன் மனுதாரரான ராம ரவிக்குமார் தரப்பில் மாவட்ட ஆட்சியர் -கோவில் ஆணையர்- உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அந்த தருணத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என இறுதி நிமிடம் வரை உறுதி அளித்த தமிழக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தீபத்தை ஏற்றாமல் ஏமாற்றி விட்டது எனவும் மனுதாரர் சார்பில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் இருந்து திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சி மீது தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியவில்லை. அதற்கான காரணம் குறித்து விளக்கமான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால்… அதனை பரிசீலனை செய்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.













