கவிஞர் சேரன் அவர்களுக்கு…
இருபது வருடத் தோழமை. காலம் பல கடந்தாலும், அந்தத் தோழமையின் நெருக்கம் ஒருபோதும் குறைந்ததில்லை. எங்கு கண்டாலும் இன்முகத்துடன் எதிர்கொண்டு, உதடுகளால் பேசுவதைவிட உள்ளத்தால் அதிகம் பேசியவர் நீங்கள்.
அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதில் எந்தப் போலித்தனமும் இல்லாத உன்னதமான பண்பாளர். மனிதர்களை அவர்களின் கருத்துகளைக் கடந்து நேசிக்கத் தெரிந்தவர்.
ஒருமுறை, “நீர் ஒரு ஊடகப் போராளிதான்” என்று எனது துணிவைப் பாராட்டிய உங்கள் வார்த்தைகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அது வெறும் பாராட்டு மட்டுமல்ல; ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளிக்குக் கொடுத்த அங்கீகாரம். அந்த வார்த்தைகளின் வெம்மை என்றும் என்னுள் இருக்கும்.
ஈழத்தின் வலிகளையும் நினைவுகளையும் சுமந்த கவிஞனாக, எங்களோடு உரையாடிய தோழனாக, அன்பைப் பகிர்ந்த மனிதராக உங்கள் நினைவுகள் எங்களுடன் வாழும்.
இன்று உங்கள் பிரிவு மனதை கனக்கச் செய்கிறது.
சென்று வருக கவிஞரே!
நீர் வாழ்ந்த நிலம், நீர் நேசித்த தாயகம், உமக்கு மௌனமாகத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறது.
தாயக நிலமே எழுந்து தருகிறது அஞ்சலி.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை













