அனோஜன் சிவராசா வழக்குத் தொடர்பாக சவூதி உயர் நீதிமன்றத்தில் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் ஊடாக இன்று (11) ஞாயிற்றுக்கிழமை மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீடு, சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில், இலங்கையின் சட்ட நிபுணர் குழு மற்றும் சவூதி சட்டக் குழு ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டது.
இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடு, இலங்கையிலிருந்து சென்ற விசேட சட்டத்தரணிகள் குழு மற்றும் சவூதி அரேபியாவின் சட்டத்தரணிகள் குழு என்பவற்றுக்கிடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
முகமது நபிகள் அவர்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததன் காரணமாக, சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கு முன்னர் கீழ் நீதிமன்றம் ஒன்று அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்திருந்த போதிலும், அரச சட்டவாதி தாக்கல் செய்த மேல்முறையீட்டின் பேரில் அத்தீர்ப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது.
சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு இஸ்லாமிய சட்டத்தின் கீழ் கடவுளுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கருதப்படும் ‘ஹத்’ வகைக் குற்றமாக நீதிமன்றத்தால் வகைப்படுத்தப்பட்டது.அந்தத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சவூதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு ஒன்றைத் தயாரிப்பதற்கு உதவுவதற்காக இலங்கையின் விசேட சட்டத்தரணிகள் குழு சவூதி அரேபியாவுக்குச் சென்றனர்.
இக்குழு சிவராசாவின் வழக்கை நடத்தும் சட்டத்தரணிகளுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், சட்டப்பூர்வ சமர்ப்பிப்புகளை நிறைவு செய்வதற்கும் உதவிபுரிந்தது.சவூதி உயர் நீதிமன்றம் அந்நாட்டின் உயர் நீதித்துறை நிறுவனமாகும். இது கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகளை முக்கியமாக சட்ட மற்றும் நடைமுறை அடிப்படைகளின் அடிப்படையில் மீளாய்வு செய்கிறது.
இலங்கை சட்டக் குழுவில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அசாத் நவாவி,ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா,ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட், ஜெட்டாவுக்கான கொன்சல் ஜெனரல் நீதியரசர் மொஹமட் லபார் மற்றும் சில்மி ரியாஸ்தீன் ஆகியோரும் இச்செயல்முறையில் பங்குபற்றினர்.
சிவராசாவின் வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், தூதுவர் அஜ்வாட் இதற்கு முன்னர் சிறைச்சாலைக்குச் சென்று அவரைச் சந்தித்து பேசிருந்தார்.
தற்போது ரியாத் நகர் மீது பல ஏவுகணைத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பங்களிலும் கூட, இக்குழுவினர் அவற்றைப் பொருட்படுத்தாமல் சிவராசாவுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது தொடர்பான மேன்முறையீட்டைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













