இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கட்டளைப் பிரிவான USARPAC இன் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் பி. வோவெல் இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்ட லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் பி. வோவெலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவருக்கு அன்பான வரவேற்பையும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களையும் வழங்கிய இலங்கை தரப்பினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து உருவாக்கி வரும் உறவுகள் குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ள எரிக் மேயர், நவீனமயப்படுத்தப்பட்ட திறன்களை உருவாக்குதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒத்துழைப்புகள், இந்தோ – பசிபிக் பிராந்தியம் முழுவதும் வலுவான பாதுகாப்பு மற்றும் பகிரப்பட்ட செழிப்பின் ஊடாக அமைதியை முன்னேற்றுவதற்கு பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்புகள் தொடர்ந்தும் விரிவடைந்து வரும் நிலையில், அமெரிக்கத் தூதுவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
















