‘ராஜகோபுரம் எங்கள் தலைவன்’ பாடல் புகழ் என உலக தமிழர்களால் போற்றப்படும் இந்தியாவின் பிரபல பாடகி கோவை கமலா அம்மா கனடாவை வந்தடைந்தார். கனடாவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு கலை நிகழ்வில் அவர் தனது பிரபலமான பாடல்களை நேரடியாக ரசிகர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளுக்கும் வழங்கவுள்ளார்.
கனடா வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் கலை ஆர்வலர்கள், உறவுகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. நீண்ட இசைப் பயணத்தைக் கொண்ட கமலா அம்மாவை வரவேற்க வந்திருந்தவர்கள், அவருடன் உரையாடி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
தமிழகத்தின் கோவை மண்ணில் இருந்து தனது இசைப் பயணத்தை ஆரம்பித்த கோவை கமலா அம்மா, பாரம்பரிய இசை, பக்திப் பாடல்கள் மற்றும் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்த பாடல்களை தனக்கே உரிய குரல் வளத்துடனும், உணர்வுடனும் பாடி நீண்ட காலமாக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். குறிப்பாக ஆலய இசை நிகழ்வுகள் மற்றும் ஆன்மிகக் கலை நிகழ்ச்சிகளில் அவரது குரல் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈழப் புரட்சிப் பாடல்களுடன் சினிமா பாடல்கள் மற்றும் பக்திப் பாடல்களையும் அவரது குரல் பலரது இல்லங்களையும் ஆலயங்களையும் சென்றடைந்ததுடன், நேரடி இசை நிகழ்ச்சிகள் மூலமும் அவர் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். அவரது பாடல்களில் பக்தி உணர்வுடன் இணைந்திருக்கும் தெளிவான உச்சரிப்பும், குரலின் இயல்பான நெகிழ்வும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன.
இந்தியாவில் மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் தமிழர்களின் கலை மற்றும் ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்று வரும் அவர், புலம்பெயர் தமிழ் மக்களுடன் இசையின் வழியாகத் தொடர்பை பேணி வருகிறார். வெளிநாட்டுப் பயணங்கள் அவருக்கு இசை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளை மட்டுமல்லாமல், தாயகத்திலிருந்து தொலைவில் வாழும் தமிழர்களுடன் நேரடியாகச் சந்தித்து அவர்களின் கலை, மொழி மற்றும் பண்பாட்டு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் அவரது தற்போதைய கனடா பயணமும் இசை ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலை நிகழ்வில் கோவை கமலா அம்மாவின் பாடல்களை நேரடியாகக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கனடாவில் வாழும் தமிழ் உறவுகளுக்கு கிடைக்கவுள்ளது.










