1983 ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பிறகு நாற்பத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், போதிய அளவில் அங்கீகரிக்கப்படாத அல்லது நிவர்த்தி செய்யப்படாத ஓர் அநீதியின் சுமையை இலங்கை இன்னமும் சுமந்து கொண்டிருக்கிறது.
தலைநகர் கொழும்பிலும் நாடு பூராவும் முன்னெப்போதுமில்லாத அளவில் உயிர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டமையானது, அனைத்துப் குடிமக்களையும் சமமாகப் பாதுகாக்கும் அரசின் ஆற்றல் மீதான தமிழ் சமூகத்தின் நம்பிக்கையைச் சிதைத்தது. காலம் கடந்து செல்வது அரசின் பொறுப்பைக் குறைத்துவிடாது அல்லது முன்னோக்கிச் செல்வது என்ற பெயரில் நடந்தவற்றை மூடிமறைத்துவிட முடியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் போதிய இழப்பீட்டை வழங்கத் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தவறிவிட்டன. மேலும் அண்மையக்காலங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகளுடன் ஒப்பிடும்போது,1983 ஜூலையில் உயிரிழந்தவர்களுக்கும் அழிக்கப்பட்ட சொத்துக்களுக்குமான தீர்க்கப்படாத இழப்பீட்டுப் பிரச்சினையானது, உயிர்தப்பியவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரிடையே ஒரு ஆழமான மனக்குறையாகவே இருந்துவருகிறது.
இருப்பினும், 1983 ஜூலையின் மனிதாபிமான விளைவுகளுக்குத் தீர்வு காண்பது என்பது அரசுக்குரிய பொறுப்பின் ஒரு பகுதி மட்டுமே. அந்தச் சம்பவங்கள் நிகழ்வதற்குக் காரணமாயிருந்த அரசியல் மற்றும் நிறுவன ரீதியிலான தோல்விகளுக்குத் தீர்வு காண்பதும், அவை மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வதுமே மிக ஆழமான கடமையாகும்.
நிலையான நல்லிணக்கத்திற்கு, சிறுபான்மையினருக்கு நாட்டின் ஆட்சியில் தமக்குச் பயனுள்ள குரல் உள்ளது என்றும், தங்களது கவலைகள் கேட்கப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை இருக்க வேண்டும். இதனால்தான், அதிகாரம் அர்த்தமுள்ள வகையில் பகிர்ந்தளிப்பது மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது உள்ளிட்ட அரசியலமைப்பு உத்தரவாதங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நல்லிணக்கத்திற்கு மட்டுமல்லாமல், கடந்த காலத் தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் அத்தியாவசியமானதாகும்.
எனவே, தேசிய சமாதான பேரவை அரசாங்கத்திடம் பின்வருவனவற்றை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
1983 ஜூலையில் அரசின் தோல்விகளை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் ; உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புகளுக்கான நீண்டகாலமாக நிலுவையிலுள்ள இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண ஒரு நம்பகமான பொறிமுறையை நிறுவ வேண்டும் ; காணாமல் போனோர் தொடர்பான நடவடிக்கைகளையும் குடிமக்களின் காணிகளை மீள ஒப்படைப்பதையும் விரைவுபடுத்த வேண்டும். நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதிக்காமல் நடத்த வேண்டும் ; மொழிச் சமத்துவத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ; சிறுபான்மை சமூகங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் வழக்கமான உரையாடலைப் பேணவேண்டும்.
தேசிய நல்லிணக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்த ஒரு அரசாங்கம், சமூகங்களை சமமான நடத்துவதை வெறும் வாக்குறுதியாக மட்டும் வழங்கக் கூடாது. 1983. ஜூலையின் தோல்விகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதவாறு, மோதலுக்கான அடிப்படைக் காரணிகளுக்குத் தீர்வு காணும் அதே வேளையில், கடந்த காலத் தவறுகளுக்கு நீதியை வழங்குவதற்கான வெளிப்படையான நடவடிக்கைகளையும் அது எடுக்க வேண்டும்.













