கொழும்பு மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டேசி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஒஸ்வால்ட் பெரேரா, இந்த வழக்கு தொடர்பான வழக்குக்கு முந்தைய கலந்தாய்வுக்காக திகதி ஒன்றை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
குற்றப்பத்திரிகை
அத்துடன், இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான டேசி ஃபாரஸ்ட் தொடர்பான வழக்கீட்டுத் தரப்பின் இறுதி நிலைப்பாட்டை அந்தத் திகதியில் அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும், குற்றப்பத்திரிகையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் அன்றைய தினம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட அனைத்து முன்மொழிவுகளையும் பரிசீலித்த நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வழக்குக்கு முந்தைய கலந்தாய்வுக்காக மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சுமார் 59 மில்லியன் ரூபாய் பணத்தை வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாகக் குற்றம் சாட்டியே இந்த இரு பிரதிவாதிகளுக்கும் எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












