பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது
கிளிநொச்சி மாவட்டத்தின் உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேஸ்குமார் சங்கீத்சன் என்னும் சொல்லிசைப்பாடகர் அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இந்த நாட்டிலே காலத்திற்கு காலம் இவ்வாறான கலைஞர்களும், படைப்பாளர்களும், ஊடகவியலாளர்களும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். பல படைப்புக்கள் வெளியீடு செய்யமுடியாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கலைஞனுடைய கைது இடம்பெற்றிருக்கின்றது.
இந்த சொல்லிசைப் பாடகர் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருப்பதானது கருத்துச் சுதந்திரத்தின்மீதான அடக்குமுறையினையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறாக இந்தநாட்டில் அடக்குமுறைக் கருவியாக பயங்கரவாதத் தடைச்சட்டம் பாவிக்கப்பட்டுவருகின்றது. எனவேதான் இந்த நாட்டிற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் தேவையில்லையென நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.
இந்நிலையில் தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள சங்கீத்சன் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டுமென இந்த உயரிய சபையைக் கோருவதுடன், இந்த நாட்டில் அடக்கு முறைக் கருவியாக உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்றார்.













