கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீகஹவத்த பகுதியில், முறையான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்து வந்த நட்சத்திர ஹோட்டல் ஒன்று வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக இன்று சனிக்கிழமை (30) இந்த விசேட சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முற்றுகையின்போது, உணவகத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 90 மதுபானப் போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அந்த ஹோட்டலின் மேலாளரும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட மதுபானத் தொகையையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காகவும் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.













