பெங்களூரு எம். சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.
அறிமுக ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஜேக்கப் டவியின் துல்லியமான பந்துவீச்சு, விராத் கோஹ்லி. தேவ்டத் படிக்கல் ஆகியோரின் அதிரடி அரைச் சதங்கள் என்பன றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சார்பாக இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம் வீண் போனது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 15.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
எவ்வாறாயினும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
மொத்த எண்ணிக்கை 9 ஓட்டங்களாக இருந்தபோது பில் சொல்ட் (8) ஆட்டம் இழந்தார். இதனால் பெங்களூரு அணி ஆட்டம் கண்டது.

ஆனால், அனுபவசாலியான விராத் கோஹ்லியும் தேவ்டத் படிக்கல்லும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
தேவ்டத் படிக்கல் 26 பந்துகளில் 7 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் அதிரடியை ஆரம்பித்த விராத் கோஹ்லி, 3அவது விக்கெட்டில் அணித் தலைவர் ரஜாத் பட்டிதாருடன் 22 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் டிம் டேவிட்டுடன் 19 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை இலகுவாக வெற்றி அடையச் செய்தார்.

ரஜாத் பட்டிதார் 12 பந்துகளில் 2 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 31 ஓட்டங்களையும் டிம் டேவிட் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
விராத் கோஹ்லி 38 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் டேவிட் பெய்ன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அணித் தலைவர் இஷான் கிஷான், அனிக்கெட் வர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.
இந்த மொத்த எண்ணிக்கையில் நால்வர் இரட்டை இலக்கங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் மூவர் மாத்திரமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
ஜேக்கப் டபி தனது 4 ஓவர்களையும் தொடர்ச்சியாக வீசி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைப் கைப்பற்ற 4.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 விக்கெட்களை இழந்து 29 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆரம்ப வீரர் ட்ரவிஸ் ஹெட் 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் இஷாந்த் கிஷாந்த், ஹென்றிச் க்ளாசன் (31) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 99 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.
மொத்த எண்ணிக்கை 155 ஓட்டங்களாக இருந்தபோது இஷான் கிஷான் ஆட்டம் இழந்தார். 38 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷான் 8 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 80 ஓட்டங்களைக் குவித்தார்.
அனிக்கெட் வர்மா 18 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 3 பவுண்டறிகள். 4 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களை விளாசினார்.
பந்துவீச்சில் ஜேக்கப் டவி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெடக்ளையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஜேக்கப் டவி.
