வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் ஆறாவது வருடாந்த ரி20 கிரிக்கெட் போட்டியில் சென். பட்றிக்ஸ் கல்லூரியை 53 ஓட்டங்களால் யாழ்ப்பாணம் கல்லூரி வெற்றிகொண்டு கிண்ணத்தை இரண்டாவது தடவையாக சுவீகரித்தது.
2022க்குப் பின்னர் யாழ்ப்பாணம் கல்லூரி வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இணங்கிய யாழ்ப்பாணம் கல்லூரி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைக் குவித்தது,
பொன் அணிகளின் ஆறு வருட ரி20 கிரிக்கெட் வரலாற்றில் அணி ஒன்று பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். 2024இல் யாழ்ப்பாண்ம் கல்லூரி 8 விக்கெட்களை இழந்து பெற்ற 143 ஓட்டங்களே இதற்கு முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.
அத்துடன் யாழ்ப்பாணம் கல்லூரி இன்று 53 ஓட்டங்களால் ஈட்டிய வெற்றியானது இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ரி20 கிரிக்கெட் தொடரில் ஈட்டப்பட்ட மிகப் பெரிய வெற்றியாகும்.
இன்றைய போட்டியில் ஆரம்ப வீரராக களம் இறங்கிய ஹமிஷ் ஹார்மிஷன், சக வீரர் ரொபின்சன் உதயகுமார் ஜோன்சனுடன் ஜோடி சேர்ந்து 20 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.
ஆனால், இருவரும் அதே மொத்த எண்ணிக்கையில் 3 பந்துகள் வித்தியாசத்தில் தலா 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
அதனைத் தொடர்ந்து சசிகரன் அஷ்மின், சுரேஷ் கபிஷன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 33 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
அஷ்மின் 24 பந்துகளில் 34 ஓட்டங்களையும் கபிஷன் 13 பந்துகளில் 21 ஓட்டங்களையும் குவித்தனர்.
மத்திய வரிசையில் கேதீஸ்வரன் ஹரிஷன் 21 ஓட்டங்களையும் உதயராஜா கென்றிக்சன் ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சிவநாதன் ஷெஹான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பிரேமநாயகம் மதுசன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெபின்சன் கெமிஷன் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
170 ஓட்டங்கள் என்ற கடுமையான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். பட்றிக்ஸ் கல்லூரி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
முன்வரிசை வீரர்கள் கவனக் குறைவால் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தனர்.
முதல் ஐந்து வீரர்களில் ஆரம்ப வீரர் நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் (10), மதியழகன் ஸ்டீவ் ஆதித்யா (14), பிரதீப் மெலோடியஸ் டவின் (16) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
மத்திய பின்வரிசையில் பிரேமநாயகம் மதுஷன் (30 ஆ.இ.), ஜெயரூபன் டினுலக்சன் (12) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
பந்துவீச்சில் சுரேஷ் கபிஷன் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திவாகரன் கார்த்திகன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: உதயராஜா கென்றிக்சன் (ஆட்டம் இழக்காமல் 23 ஓட்டங்கள், ஒரு விக்கெட், ஒரு ரன்அவுட்)






