அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அமுல்படுத்துவது தொடர்பாக இதுவரை எந்தவொரு இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து தமது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய சூழலில் அரச நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகளை எவ்வாறு வினைத்திறனாக முன்னெடுப்பது என்பது குறித்துத் துறைசார் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டவுடன், அது குறித்துப் பொதுமக்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் முறையாக அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

