தற்போதைய திசைகாட்டி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படுவதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்தார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், 1977 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வடக்கு மற்றும் கிழக்கில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்படவில்லை எனவும், கடந்த காலங்களில் கொலைகள், கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் தாராளமாக நடைபெற்ற போதிலும் அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய அரசாங்கம் மகிந்த, ரணில் அல்லது கோட்டாபயவின் அரசாங்கம் அல்ல என்றும், இது திசைகாட்டி அரசாங்கம், அதாவது மக்களின் அரசாங்கம் என்பதால் இங்கு சட்டம் அனைவருக்கும் சமமாகவே அமுல்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
டக்ளஸ் தேவானந்தா மக்கள் சேவைக்காக கட்சியை நடத்தவில்லை, மாறாக ஒரு வியாபாரமாகவே அதனை முன்னெடுத்தார் எனச் சாடிய அவர், சந்திரிகாவின் ஆட்சிக்காலம் முதல் அவர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு வடபகுதி மக்களுக்குப் பெரும் அநீதிகளை இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.
யாழ்ப்பாணத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆட்கடத்தல்கள் இடம்பெற்ற ஆயுத கலாச்சாரம் நிலவியதாகவும், இதற்கு ஈ.பி.டி.பி (EPDP) கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த அதீத அதிகாரமே காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
டக்ளஸ் தேவானந்தாவால் பாதிக்கப்பட்ட எவரேனும் இருப்பின், அச்சமின்றி தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்த சிதம்பரம் கருணாநிதி, பாதிக்கப்பட்டவர்களைத் தான் முன்னின்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்துச் செல்லத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
பாதாள உலகத் தொடர்புகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அவருக்குப் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும், பல வருடங்களாக எந்த ஜனாதிபதியாலும் செய்ய முடியாததை இந்த அரசாங்கம் துணிச்சலாகச் செய்துள்ளதற்காக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, தற்போது ஊடக சுதந்திரம் இல்லை எனச் சிலர் கூச்சலிடுகின்றனர், ஆனால் கடந்த காலங்களில் சியத மற்றும் சிரச நிறுவனங்களுக்கு தீ வைத்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள் எனத் தெரிவித்த அவர், தவறு செய்யாதவர்கள் சட்டத்திற்குப் பயப்படத் தேவையில்லை எனவும், பொய்களைக் கூறி மக்களைத் திசைதிருப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டவுடன் மருத்துவமனைக்குச் செல்லும் போக்கினையும் அவர் இதன்போது விமர்சித்தார்.

