போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவர், பல மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி என கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இரத்கம பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்டியாகொடை பொலிஸாரால் கடந்த 24 ஆம் திகதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். மேற்படி விசாரணைகளின் போது சந்தேகநபர், வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள பாதாள உலகக்குழுத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்திருந்தமை மற்றும் அவர்களின் வழிக்காட்டலுக்கமைய மனிதப் படுகொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுப்பட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
சந்தேகநபர் விசாரணை அதிகாரிகளிடம் அளித்துள்ள வாக்குமூலத்தின் படி , கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி அம்பலாங்கொடை பகுதியில் ரி-56 ரகத் துப்பாக்கியால் இருவரைக் சுட்டு படுகொலை செய்து, மேலும் மூவரைப் படுகாயப்படுத்திய சம்பவத்தில் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்டுள்ளார். அத்துடன் இவ்வருடம் மே 3ஆம் திகதி மீட்டியகொட பொலிஸ் பிரிவில் ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இருவரைக் கொலை செய்தமை மற்றும் நவம்பர் 28ஆம் திகதி அதே பகுதியில் நபர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தமை போன்ற பாரிய குற்றச் செயல்களில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் கொலைச் சம்பவங்களுக்குக் கூலிப்படையாக செயற்பட்டு உடந்தையாக இருந்த 28 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் கடந்த 27ஆம் திகதி அம்பலாங்கொடை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக்காவலில் உள்ள பிரதான சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக வாக்குமூலங்களுக்கு அமைய, நேற்று முன்தினம் (27) இரத்கம பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் கைதான சந்தேகநபர்கள் தொடர்பில் மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் முன்னெடுத்து வருகின்றனர்.

