ரெட்ட தல – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : பி டி ஜி யுனிவர்சல்
நடிகர்கள் : அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரிஷ் பெராடி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : கிரிஷ் திருக்குமரன்
மதிப்பீடு : 2.5 / 5
தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியில் காளி ( அருண் விஜய்) எனும் சிறுவனும் ஆந்த்ரே ( சித்தி இத்னானி)எனும் சிறுமியும் பெற்றோர்கள் இல்லாததால் நெருக்கடியான தருணத்தில் அன்பை பகிர்ந்து கொண்டு, நண்பர்களாகிறார்கள்.
அதன் பிறகு வேறு இடத்திற்கு சென்று வாலிப வயதில் காளி திரும்பவும் ஆந்த்ரேவை சந்திக்க வருகிறார். இளமை பருவத்தில் இருக்கும் ஆந்த்ரே – காதலை விட பணம்தான் பெரிது.
இது நான் எம்முடைய அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம் என கூறி, காளியின் காதலை ஏற்க மறுக்கிறார். அத்துடன் பணத்தின் மீதான தன் தீராத ஆசையையும் காளியிடம் வெளிப்படுத்துகிறார்.
இந்தத் தருணத்தில் காளியை போன்ற தோற்றம் கொண்ட உபேந்திரா எனும் இளைஞனை காளி சந்திக்கிறான். தன்னுடைய தோற்றத்தை அப்படியே உரித்து வைத்திருக்கும் காளியை சந்தித்த உடன், உபேந்திராவும் மகிழ்ச்சி அடைந்து அவரை நண்பனாக்கிக் கொண்டு விருந்தோம்பல் செய்கிறான்.
அத்துடன் தன்னுடைய விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு காரையும் கொடுத்து வாழ்க்கையை அனுபவி என கூறுகிறார். இதனை பார்த்த ஆந்த்ரே , காளியிடம், ‘உன்னை போலவே இருக்கும் உபேந்திராவை கொன்றுவிட்டு , அவனிடம் உள்ள சொத்தை அபகரித்தால்… நாம் மகிழ்ச்சியாக வாழலாம் ‘ என கூறுகிறார்.
இதைக் கேட்கும் காளி உபேந்திராவை கொன்றுவிடுகிறார். அதன் பிறகு காளியும் ஆந்த்ரேவும் ஒன்றாக இணைந்தார்களா? இல்லையா? உபேந்திராவின் பின்னணி என்ன? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
படத்தின் முதல் பாதியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாக தொடங்கி.. காளியும், உபேந்திராவும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் தான் கதைக்கான விறுவிறுப்பு தொடங்குகிறது.
அதன் பிறகு ஏராளமான எதிர்பாராத சுவராசியமான திருப்பங்கள் இருந்தாலும்… அதனை காட்சிப்படுத்திய விதத்தில் பிரம்மாண்டம் – வியப்பை ஏற்படுத்தினாலும்.. பார்வையாளர்களுக்கு எந்த தாக்கமும் ஏற்படுத்தாத வகையில் பலவீனமான திரைக்கதை எழுதப்பட்டிருப்பதால்.. ரசிகர்களுக்கு இரட்டை தலைவலி ஏற்படுகிறது.
காளி கதாபாத்திரத்தின் பின்னணி குறித்து உச்ச காட்சியில் விவரிக்கும் போது லாஜிக் கிலோ என்ன விலை? என கேட்கத் தோன்றுகிறது. அதிலும் ஆசைதான் அழிவுக்கு காரணம் என சொல்வதற்காக இயக்குநர் மேற்கொண்டிருக்கும் உத்திகள் அனைத்தும்.. பார்வையாளர்கள் எழுப்பும் லாஜிக்கலான கேள்வியால் அடிபடுகிறது.
ஆனாலும் காளி / மப்புள் உபேந்திரா என இரண்டு கதாபாத்திரங்களிலும் சிறிய அளவிலான வித்தியாசத்தை உடல் மொழியிலும், உச்சரிப்பிலும் வெளிப்படுத்தி ரசிகர்களை தான் சிறந்த நட்சத்திர நடிகர் என்பதை உறுதிப்படுத்தி, அவர்களின் ஆதரவை கணிசமாக பெறுகிறார் அருண் விஜய். குறிப்பாக எக்சன் காட்சிகளை அருண் விஜய் அதிரடி காட்டி அசத்தியிருக்கிறார்.
ஆந்த்ரே எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னாணியின் அழகு – அவருடைய கதாபாத்திரத்திற்காக குறைத்திருப்பது.. அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது. அவருக்கான காட்சிகளும் குறைவு என்பதால்… நடிப்பிற்கான பங்களிப்பும் குறைந்திருக்கிறது.
திரவியம் எனும் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கம்போல் எரிச்சலூட்டும் உடல் மொழியுடன் இரட்டை அர்த்த வசனத்தை பேசியிருப்பது அபத்தம். ஜான் விஜய் இந்த பாணியிலான நடிப்பை தொடர்ந்தால்… திரையுலகம் அவருக்கு விஆர்எஸ் தரலாம்.
‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடலிலும், உச்சகட்ட காட்சியின் பின்னணி இசையிலும் மட்டுமே இசையமைப்பாளர் சாம் சி எஸ் தென்படுகிறார்.
நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என விரும்பும் ரசிகர்களுக்கான படம் இது என உறுதிபட கூறலாம்.
ரெட்ட தல – பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட்டு வீக்கு

