நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான திரௌபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தயாராகி வரும் அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல்களை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இயக்குநர் மோகன். ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ எனும் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வை. ஜி. மகேந்திரன், பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், தேவயானி சர்மா, அருணோதயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிலிப் ஆர். சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். வரலாற்று காவியமாக தயாராகும் இந்த திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எம் பிலிம் கொர்ப்பரேசன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் திரௌபதி தேவியாக தோன்றும் நடிகை ரக்ஷனாவின் கதாபாத்திர தோற்றப் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
திரௌபதி படத்தின் முதல் பாகத்தின் நீட்சியாக 14-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற சரித்திர சம்பவங்களுடன் பிணைக்கப்பட்ட படைப்பாக ‘திரௌபதி 2’ தயாராகிறது என்பதும் , இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

