நாட்டில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை அடையாளம் கண்டு, ஆராய்ந்து அவற்றை பாதுகாப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்திற்கும் அதன் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஆலோசனை வழங்க தற்காலிகமாக ஒரு ஆலோசனைக்குழுவை நியமிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு, சம உரிமை இயக்கமானது புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உங்கள் கையொப்பத்துடன் நவம்பர் 01 2025 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு எண் 2460/56 மூலம் உங்கள் அமைச்சு அந்த நோக்கத்திற்காக ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்திருந்ததை அடுத்து சம உரிமை இயக்கமாகிய நாங்கள் அதற்கு எங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தோம்.
இது தொடர்பாக நாங்கள் உட்பட சமூகத்தில் உள்ள உணர்திறன் மிக்க குழுக்களின் விமர்சனங்களை எதிர்கொண்டு, ஆலோசனைக் குழுவை நியமிக்கும் மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவிப்பை மீளப் பெற அரசாங்கம் முடிவு செய்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், சம உரிமை இயக்கமாகிய நாங்கள், இது தொடர்பாக பின்வரும் விடயங்களில் மேலும் கவனம் செலுத்துமாறு உங்களையும் உங்கள் அமைச்சையும் கேட்டுக்கொள்கிறோம்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் அதன் பணிப்பாளர் நாயகத்தின் முழுப் பொறுப்பு, நாட்டில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை அடையாளம் கண்டு, ஆராய்ந்து பாதுகாப்பதாகும். அதற்கான சிறப்பு அறிவு கொண்ட பணியாளர்களையும் இந்தத் திணைக்களம் கொண்டுள்ளது. குறைபாடுகள் இருந்தால், அந்த நோக்கத்திற்காக தகுதிவாய்ந்த நிரந்தர ஊழியர்களை நியமித்து, அந்தக் குறைபாடுகளை சரிசெய்வது உங்கள் அமைச்சினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். இல்லையென்றால், அந்தத் திணைக்களத்திற்கும் அதன் பணிப்பாளர் நாயகத்திற்கும் ஆலோசனை வழங்க தற்காலிக அடிப்படையில் ஒரு ஆலோசனைக்குழுவை நியமிப்பதன் தேவை மற்றும் அதன் வகிபாகம் முதலில் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இது தொடர்பான முறையான விளக்கத்தை வழங்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
நாம் அனைவரும் அறிந்தபடி, இலங்கை என்பது பல இன, பல மத நாடு. இதில் பல்வேறு மொழி மத மற்றும் கலாசார மக்கள் தொகையும், வளமான வரலாறும் உள்ளன. அது மட்டுமல்லாமல், இன மற்றும் மத அடிப்படையில் அந்த சமூகங்களுக்கிடையில் தொடர்ந்து மோதல்களை உருவாக்கி பல்வேறு அரசியல் இலாபங்களுக்காகவும், அரச நிர்வாகத்திற்காகவும் அவற்றைப் பயன்படுத்தும் அரசியல் வரலாற்றைக் கொண்ட ஒரு அரசாகவும், இன்றும் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வினை வழங்கத் தவறிய அரசாகவுமே இலங்கை அரசு இருந்து வருகிறது.
இத்தகைய பின்னணியில், தொல்பொருள் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொழில்முறை பொறுப்பை நிறைவேற்றுவதற்கும், அனைத்து தேசிய சமூகங்கள் மற்றும் மத மற்றும் கலாசார சமூகங்களின் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கும் இந்தத் திணைக்களம் புத்த சாசன அமைச்சிலிருந்து அல்லது வேறு மத அமைச்சிலிருந்து விலகி தனி நிறுவனமாகச் செயற்பட வேண்டும். ஆனாலும், தொல்பொருள் திணைக்களம் வரலாறு முழுவதும் புத்த சாசன அமைச்சின் கீழ் இருந்ததால், அந்தத் துறையின் செயற்பாடுகள் தொடர்பாக பிற மத மற்றும் சிறுபான்மை சமூகங்களிடையே அவநம்பிக்கையும் சந்தேகமும் வளர்ந்துள்ளன.
இத்தகைய சூழலில்தான் நீங்களும் உங்கள் அமைச்சும் ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளீர்கள் அல்லது நியமிக்கப் போகிறீர்கள். இது தொடர்பாக பல்வேறு தேசிய சமூகங்களிடையே ஏற்கனவே சந்தேகங்கள் எழுந்துள்ளன. தொல்பொருள் திணைக்களம் அனைத்து தேசிய சமூகங்களையும், தொல்பொருள் மதிப்புள்ள அவர்களின் மத மற்றும் கலாசார பாரம்பரியத்தையும் பாதுகாக்க பாடுபட வேண்டும். இந்த நோக்கத்திற்காக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான ஓர் அமைப்பை தொல்பொருள் திணைக்களம் தொடர்ந்து பேண வேண்டும். ஆனாலும், அரசியல் மற்றும் மத நிறுவனங்களின் செல்வாக்கின் கீழ் தொல்பொருள் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் சாக்குப்போக்கின் கீழ், புறநிலைச் சான்றுகள் இல்லாத தளங்களைப் பயன்படுத்தி கலாசார மற்றும் மத ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. மேலும் உண்மையான தொல்பொருள் மதிப்புள்ள பாரம்பரிய தளங்கள் இனவெறி மற்றும் மத நோக்கங்களுக்காக அழிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் ஒரு தேசிய சமூகம், ஒரு மதம் சார்பான ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது அல்லது அவ்வாறானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது கடுமையான தவறாகும்.
எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தொல்பொருள் திணைக்களம் புத்த சாசன அமைச்சிலிருந்து தனியான ஒரு சுயாதீன நிறுவனமாக நிறுவப்பட வேண்டும் என்றும், அதன் செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்கு பொதுமக்களின் கருத்துகளையும் புகார்களையும் பெறுவதற்கான முறையான அமைப்பை அந்தத் திணைக்களம் உருவாக்கவேண்டும் என்றும் சம உரிமை இயக்கம் முன்மொழிகிறது.
ஆனாலும் தொல்பொருள் திணைக்களத்தின் பணிக்காக அரசாங்கம் ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்தால், நாங்கள் முன்மொழியும் வழிமுறையிலிருந்து விலகி அனைத்து தேசிய மற்றும் மத மற்றும் கலாசார பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இனவாத மற்றும் மத கடும்போக்குவாதக் கருத்துக்களைக் கொண்டிருக்காத, வரலாற்றில் அத்தகைய அரசியல் நடைமுறைகளில் ஈடுபடாத குறிப்பாக உரிய நோக்கத்திற்காக நேர்மையான அறிவுஜீவிகளைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழுவை நியமிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

