இலங்கை டென்னிஸ் சங்கத்தினால் நடத்தப்பட்ட இலங்கை டென்னிஸ் சங்க யெட்டி (Yeti) கடினதரை சம்பியன்ஷிப்பில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை மாணவி அனன்யா நோபட் 4 சம்பியன் பட்டங்களை சுவீகரித்து அசத்தினார்.
அத்துடன் நின்று விடாமல் ஓர் உப சம்பியன் பட்டத்தையும் வென்றெடுத்து டென்னிஸ் பிரியர்களைப் பிரமிக்கவைத்தார்.
பதினான்கு வயதே நிரம்பிய அனன்யா 3 ஒற்றையர் சம்பியன் பட்டங்களையும் ஓர் இரட்டையர் பட்டத்தையும் சுவீகரித்தார்.
பாடசாலை மாணவி ஒருவர் ஒரே டென்னிஸ் சம்பியன்ஷிப்பில் அதிக சம்பியன் பட்டங்களை வென்றெடுத்தது இதுவே முதல் தடவையாகும்.
இதன் மூலம் தான் கல்வி கற்கும் பம்பலம்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலைக்கு பெருமையையும் புகழையும் அனன்யா பெற்றுக்கொடுத்துள்ளார்.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் தன்னைவிட ஒரு வயது மூத்தவரான சந்திதி உஸ்கொடஆராச்சியை 6 – 1, 6 – 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் அனன்யா நோபட் வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தை சூடினார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலை வீராங்கனை 16 வயதுடைய ஜித்மி பெர்னாண்டோவை எதிர்த்தாடிய அனன்யா நோபட் 6 – 2, 6 – 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று சம்பியனானர்.
தொடர்ந்து பெண்களுக்கான (பகிரங்க பிரிவு) இறுதிப் போட்டியில் 17 வயதான வினெத்யா தர்மரட்னவை சந்தித்த அனன்யா நோபட் 6 – 2, 6 – 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் வெற்றிபெற்று மூன்றாவது ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தார்.
18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இரட்டையர் போட்டியிலும் அனன்யா நோபட்டுக்கு மேலும் ஒரு சம்பியன் பட்டம் கிடைத்தது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் வினெத்யா தர்மரட்னவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய அனன்யா நோபட் இறுதிப் போட்டியில் கெஹன்சா மெத்னதி, துல்கினி ரணசிங்க ஜோடியினரை 6 – 4, 6 – 4 என்ற புள்ளிகளைக் கொண்ட இரண்டு நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார்.
பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் அனன்யாவுக்கு உப சம்பியன் பட்டமே கிடைத்தது.
இறுதிப் போட்டியில் துவினி டி சில்வா – பியன்கா அக்விஸ்டாபேஸ் ஜோடியினருக்கு பலத்த சவாலாக விளையாடிய அனன்யா நோபட் – வினெத்யா தர்மரட்ன ஜோடியினர் 6 – 7, 4 – 6 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.

