‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி பிரபலமான நடிகர் சுரேஷ் ரவி கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
இயக்குநர் கே. பாலையா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் சுரேஷ் ரவி, யோகி பாபு, தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ், கருணாகரன் , வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்புக்குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி ஆர் டாக்கீஸ் கொர்ப்பரேசன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. பாஸ்கரன்- பி ராஜ பாண்டியன் -பி. டேங்கி -ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
45 நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது என்றும், தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

