குணச்சித்திர நடிகராகவும் , வில்லனாகவும் ரசிகர்களிடத்தில் நற்பெயரை சம்பாதித்த நடிகர் போஸ் வெங்கட்- ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து ‘சார்’ எனும் படத்தை இயக்கிய போஸ் வெங்கட், மீண்டும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்குகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
டுபாயைச் சார்ந்த முன்னணி தொழிலதிபரான கண்ணன் ரவி தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அவருடைய கே ஆர் ஜி மூவிஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை நடிகர் போஸ் வெங்கட் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அத்துடன் தயாரிப்பாளரும், நடிகருமான வி. மதியழகன் அவருடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனமான எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இப்படத்தில் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தருணத்தில் படத்தை பற்றி இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில் , ”விளையாட்டை பின்னணியாக கொண்ட இந்த திரைப்படத்தில் காதல்- குடும்பம் – சமூகம் – சார்ந்த விடயங்களும் இடம்பெறும்” என்றார்.

