டீசல் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் – எஸ் பி சினிமாஸ்
நடிகர்கள் : ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, தீனா, ஜார்ஜ் , தங்கதுரை மற்றும் பலர்
இயக்கம் : சண்முகம் முத்துசாமி
மதிப்பீடு : 2.5 / 5
இயக்குநரும், நடிகருமான சண்முகம் முத்துச்சாமி மூன்றாண்டு உழைப்பில் உருவாக்கிய படம் தான் ‘டீசல்’. இந்த எரிபொருளின் பின்னணி குறித்தும்…. கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும்… சமூக அக்கறையுடன் உருவாகி இருக்கும் இந்த படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
வட சென்னையில் கடற்கரை ஒட்டிய பகுதியில் இந்திய அரசாங்கம் கச்சா எண்ணெயை எடுத்துச் செல்வதற்காக பல கிலோமீற்றர் தொலைவிற்கு பிரம்மாண்ட ராட்சத குழாய்களை பொருத்துகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவ மக்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குகிறது. இதற்காக மீனவ மக்களை ஒருங்கிணைக்கும் ஐந்து இளைஞர்களை குறி வைத்து காவல்துறை வேட்டையாட… இதனால் அந்த ராட்சத குழாய் வழியாக கச்சா எண்ணெய் தடையின்றி விநியோகம் ஆகிறது.
இந்தத் தருணத்தில் அரசுக்கு தெரியாமல் அரசு அமைத்த ராட்சத குழாயில் இருந்து கச்சா எண்ணெயை திருடி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறது மனோகர் ( சாய்குமார்) தலைமையிலான கும்பல். பல ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இன்றி நடைபெற்று வரும் இந்த கள்ளச் சந்தையிலான கச்சா எண்ணெய் வியாபாரத்திற்கு போட்டியாக காவல்துறை உயரதிகாரி மாயவேல் ( வினய் ராய்) என்பவரின் உதவியுடன் பாலமுருகன் ( விவேக் பிரசன்னா) என்பவர் களமிறங்குகிறார்.
இந்நிலையில் மும்பையைச் சார்ந்த பெரு நிறுவன தொழிலதிபர் பதான் ( சச்சின் கடேக்கர்) தான் தொடங்கவுள்ள புதிய நிறுவனத்திற்காக சென்னையில் தனியார் துறைமுகத்தை அமைக்க திட்டமிடுகிறார். இதனை அறிந்து கொண்ட மனோகர் இந்த முயற்சியை தடுக்க நினைக்கிறார். ஆனால் பதான்.. தன் துறைமுக திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்.. அரசின் அதிகாரப்பூர்வ கச்சா எண்ணெயை கணிசமான அளவிற்கு திருடி பதுக்துகிறார்.
மனோகரின் நண்பரான டில்லியின் மகன் வாசு ( ஹரீஷ் கல்யாண்) இதனை கண்டறிந்து மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறாக இருக்கும் இந்த கச்சா எண்ணெய் குழாயை அகற்ற போராடுகிறார். அவருடைய போராட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பரபர எக்சனுடன் விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
வடசென்னை- மீனவர்கள் -கச்சா எண்ணெய்- ராட்சதக் குழாய் – கச்சா எண்ணெய் திருட்டு -கள்ள சந்தையில் கலப்பட எரிபொருள் விற்பனை- அரசியல்வாதி- அரசு அதிகாரிகள் – காவல்துறை அதிகாரி- மக்களின் நலனை விரும்பும் போராளிகள்- என விறுவிறுப்பாக செல்லும் முதல் பாதி திரைக்கதையில் காதல் காட்சிகள் அவசியமில்லாமல் வலிந்து திணித்திருப்பது ரசிகர்களை சோர்வடையச் செய்கிறது. இருப்பினும் முதல் பாதியின் இறுதிக்காட்சியில் கொமர்சல் படைப்புகளுக்கான பரபரப்பான திருப்பத்துடன் நிறைவடைகிறது.
இரண்டாம் பாதியில் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக பெரு நிறுவன முதலாளியின் இரண்டு கோடி லீற்றர் கச்சா எண்ணெய் திருட்டு- பதுக்கல்- அரசு துறையின் கண்காணிப்பு – காவல்துறையின் தீவிர விசாரணை – செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு- மக்கள் பதற்றம்- அரசுத் துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கை – அதன் பின்னணி அரசியல் – மாநில அரசியல்- தேசிய அரசியல் -சர்வதேச அரசியல் – என எதிர்பார்ப்பிற்கு மாறாக திரைக்கதை பயணிப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.
படத்தில் அதிகார வர்க்கம் – அரசியல்வாதிகள் – லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட பெரும் தனவந்தர்கள் – ஏழை எளிய மக்கள்- என ஒவ்வொரு தரப்பினரின் சூழலுக்கு ஏற்ற உளவியல் சார்ந்த உரையாடல்கள்… பெரும் கவனத்தை ஈர்க்கிறது.
வாசு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் அதிரடி எக்சன் நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அதற்காக அந்த கதாபாத்திரத்தை நேர்த்தியாக தன் தோளில் சுமந்து அற்புதமான நடிப்பை வழங்கி ரசிகர்களை கவர்கிறார்.
மாயவேல் எனும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் வினய் ராய் கச்சிதமாக பொருந்தி, அனுபவமிக்க நடிப்பை வழங்கி ரசிகர்களை வியக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தை ரசிக்க வைக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.இரண்டாம் பாதியில் பல கதாபாத்திரங்களுக்கான… பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் பார்வையாளர்கள் தடுமாறினாலும்.. குழப்பமடைந்தாலும்…இயக்குநர் டீசல் எனும் எரிபொருளின் விலை உயர்வு – தட்டுப்பாடு- பற்றாக்குறை- கலப்படம் – குறித்த பின்னணியை விவரித்திருப்பதால்… பரவாயில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
டீசல் – ஈசலும் அல்ல… வீசலும் அல்ல… தகைசால் படைப்பு.