நடிகர் – அறிமுகத்தின் போதே வெறுக்கப்பட்ட நடிகர் – பாராட்டப்பட்ட நடிகர்- வசூல் நடிகர் – வேற்று மொழி படங்களில் நடித்த நடிகர் – கோலிவுட் மூலம் ஹொலிவுட்டில் தடம் பதித்த நடிகர் – தற்போது சர்ச்சைக்குரிய நடிகர்- என திரையுலகினரால் விதவிதமாக விமர்சிக்கப்படும் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினர் – திரை உலக பிரபலங்கள் – ரசிகர்கள் – என பலரும் பங்கு பற்றி இருந்தனர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் தனுஷ் பேசுகையில், ” எம்முடைய பால்ய பிராயத்தில் கிராமத்தில் வசிக்கும் போது அங்கு இட்லி சுட்டு விற்பனை செய்யும் பெண்மணியிடம் காசு கொடுத்து, இட்லி வாங்கி, சாப்பிட ஆசைப்படுவேன்.
ஆனால் காசு இருக்காது . இதற்காக அருகில் உள்ள நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பூக்களை பறித்துக் கொடுத்தால்.. அதற்கு கூலியாக சில நாணயங்களை வழங்குவார்கள்.
அதனை நானும் , என் மூத்த சகோதரியும் ஒன்றாக பூப்பறித்து… அதற்காக காசு வாங்கி, அதில் இட்லியை வாங்கி பசியாறி இருக்கிறோம். அந்த அனுபவம் கலப்படமற்றது. தூய்மையானது. அத்துடன் நான் சந்தித்த சில மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறேன்” என்றார்.
இதனிடையே இந்த நிகழ்வில் தனுசுடன் முதன் முதலாக மேடை ஏறிய அவரது இளைய மகன் யாத்ராவுடன் இணைந்து, தனுஷ் நடனமாடியது ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.