சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தொடர்ந்து வசூலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ‘பராசக்தி ‘ எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கலன்று வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
‘சூரரை போற்று ‘படத்தின் மூலம் தேசிய விருதினை வென்று அசத்திய இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா, அப்பாஸ், ராணா டகுபதி, பிருத்வி ராஜன், குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் என பலர் நடித்துள்ளனர். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இதனிடையே அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடிகர் விஜய் நடிப்பில் தயாராகும் ‘ஜனநாயகன் ‘ எனும் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என்பதும், இந்த’ பராசக்தி: படம் ஜனவரி 14-ம் திகதியன்று வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.