மலையாள நடிகர் அருண் சாக்கோ- சரீஷ் தேவ் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘பெண் கோடு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஜித்தன் ரமேஷ் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் அருண் ராஜ் பூத்தனல் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்தில் அருண் சாக்கோ, சரீஷ் தேவ், லட்சுமி சாந்தா, சோனா, திரவிய பாண்டியன், கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தினேஷ் பாண்டியன் இசையமைத்துள்ளார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜே என் கே எல் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரவீதா ஆர். பிரசன்னா, நித்ய காசி லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஆணும், பெண்ணும் ஒன்றல்ல . இரண்டும் வெவ்வேறானவை. பெண்களுக்கென சில பிரத்யேகமான எண்ணங்கள் உண்டு. அதனை தெரிந்து கொள்வதற்காக நாயகன் அவர்களின் உலகத்தில் ஊடுருவுகிறான். இதனை மையப்படுத்தி தான் இந்த ‘பெண் கோடு’ எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
தமிழ் – மலையாளம் என இரு மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தினை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வெளியிடுவதற்கான திட்டமிடல் நடைபெற்று வருவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.