”பிளாக் மெயில் படம் ரசிகர்களை படமாளிகையில் கட்டி போடும் திரில்லர் படைப்பாக இருக்கும்” என அப்படத்தின் நாயகனான ஜீ. வி. பிரகாஷ் குமார் தெரிவித்திருக்கிறார்.
எதிர்வரும் 12 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘பிளாக் மெயில்’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர்கள் சசி, ஏ. எல். விஜய், பி. வி. சங்கர், ரித்தேஷ், சதீஷ் செல்வகுமார் , தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி நடிகர் ஜீ.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ” இப்படத்தினை இயக்குநர் மு. மாறன் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார். அற்புதமான திரில்லர் ஜேனரிலான திரைப்படம் இது. படமாளிகையில் பார்க்கும் ரசிகர்களை இருக்கையில் கட்டி போடும் அளவிற்கு சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக படத்தின் முதல் பாதி நிறைவடையும் தருணத்திற்கு முன்பு வரும் நாற்பது நிமிடங்கள் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவரும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
இந்த திரைப்படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார் – தேஜு அஸ்வினி- ஸ்ரீகாந்த்- பிந்து மாதவி – ரமேஷ் திலக் – ‘வேட்டை’ முத்துக்குமார் – உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே டி எஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்திருக்கிறார்.