விஷ்ணு விஷால் – ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது என அதற்கான பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் ‘கட்டா குஸ்தி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி, கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கே. எம். பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் ஐசரி கே . கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்திற்கான அறிமுக காணொளி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனிடையே ‘கட்டாகுஸ்தி’ படத்தின் முதல் பாகம் தமிழில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது என்பதும், கணவனும் மனைவியும் சேர்ந்து இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை இரண்டாம் பாகம் கொமர்ஷல் அம்சங்களுடன் விவரிக்கப்படலாம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.