நியூசிலாந்து ரக்பி வீரர் ஷேன் கிறிஸ்டி (வயது 39) உயிரிழந்துள்ளாரென நியூசிலாந்து பொலிஸ் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் நெல்சன் நகரில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை (27) அதிகாலை ஷேன் கிறிஸ்டி சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக தகவல் எதனையும் உடனடியாக வழங்க முடியாது எனவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
Chronic Traumatic Encephalopathy (CTE) எனப்படும் நாள்பட்ட மூளைக் காயத்தால் ஷேன் கிறிஸ்டி பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவ்வாறான நோய் மரணத்துக்குப் பின்னரே உறுதி செய்ய முடியும். அதனால், ரக்பி விளையாட்டை பாதுகாப்பான விளையாட்டாக மாற்றும் நம்பிக்கையில், தனது மூளையை ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்க உள்ளதாக ஷேன் கிறிஸ்டி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அண்மையில் ஷேன் கிறிஸ்டி அளித்த பேட்டி ஒன்றில், “மூளை தானம் இல்லாமல், இந்த நோய் ஏற்பட எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கண்டறிய முடியாது. நியூசிலாந்தில் இந்த ஆய்வுக்கு உதவுவது முக்கியம்” என ஷேன் கிறிஸ்டி கூறியிருந்தார்.
விளையாடும் போது ஷேன் கிறிஸ்டி பலமுறை தலையில் காயங்கள் அடைந்ததாகவும், ஓய்வு பெற்ற பின்னர் தலைவலி மற்றும் மறதி போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஷேன் கிறிஸ்டியின் மரணம் குறித்து நியூசிலாந்து ரக்பி நிர்வாகம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து, “ஷேனின் விளையாட்டு மீதான ஆர்வம் எப்போதும் நினைவில் இருக்கும்” என கூறியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் முன்னாள் சக வீரர்களுக்கு நியூசிலாந்து ரக்பி நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.