‘அமரன்’ எனும் பிரம்மாண்டமான வெற்றி படத்திற்குப் பிறகு நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் ‘மதராஸி’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையின் புறநகர் பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஆர். பி. சௌத்ரி – கலைப்புலி எஸ் தாணு ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
பிரபல இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள’ மதராஸி’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், சபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுதீப் இலாமோன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் ‘மதராஸி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த முன்னோட்டத்தில் ரகு என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனான சிவகார்த்திகேயன் தோன்றுகிறார் என்பதும், வழக்கம் போல் தீவிரவாதம் – பயங்கரவாதம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதால்.. ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பதை நிரூபிப்பதால்.. இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இதன் காரணமாக இந்த முன்னோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.