தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சந்திப்பதற்கு தமிழரசு கட்சியிடம் இருந்து நேற்றையதினம் வேண்டுகோள் ஒன்று கிடைக்கப் பெற்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஒரு பொது வேலை திட்டத்திற்குள் இணங்குவதற்கான ஆரம்பகட்ட பேச்சு என்றே இது எமக்கு கூறப்பட்டது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்போது அவசரமாக ஜெனிவா அமர்வுகள் இடம்பெறும் நிலையில் பொறுப்புக் கூறல் தொடர்பான பொது தீர்மானம் ஒன்று வர இருக்கின்ற நிலையில் அது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே அவர்களையும் அழைப்பதற்கான முயற்சி ஒன்றினையும் மேற்கொண்டோம் ஆனால் அவர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.
தமிழரசு கட்சியின் கையொப்பம்
அந்த முயற்சியின் இறுதி வடிவமாக மகஜர் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அதில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரிடமும் இருந்து கையொப்பங்கள் பெறப்பட்டிருக்கின்றன.

தமிழரசு கட்சியின் கையொப்பம் மாத்திரமே இப்போது அதில் சேர்க்கப்பட வேண்டும். ஆகவே அவர்கள் இது குறித்து பரிசீலித்து அவர்கள் அவசரமான ஒரு முடிவை சொல்ல வேண்டும்.
தமிரசு கட்சினர், தங்களுடைய செயற்குழுக் கூட்டமோ அல்லது மத்திய குழுக் கூட்டமோ நாளை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருப்பதாகவும் அதிலே இந்த கடிதம் ஆராயப்பட்டு, அந்தம் கூட்ட முடியும் இடத்தில் இதில் தொடர்ந்தும் அக்கறை இருப்பதாக இருந்தால் எங்களையும் சிவில் சமூக அமைப்பினரையும் வந்து சந்தித்து இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வருவதாக சொல்லப்பட்டிருந்தது.
வெளியிடுவதை தாமதிக்க முடியாது
எங்களது தரப்பிலும் சிவில் சமூக அமைப்பு தரப்பிலும் இருந்து தமிழரசு கட்சிக்கு சொல்லியதாவது, நாங்கள் ஏற்கனவே எழுதி அவர்களுக்கு சமர்ப்பித்து இருக்கின்ற இறுதி வடிவத்திலே பொருளை மாற்றுவது கடினம்.

ஏனென்றால் கொள்கையளவில் ஏக மனதாக தீர்மானம் எடுத்து அனைவரும் அதில் கையொப்பமிட்டு இருக்கிறார்கள். ஆனால் சொற்பதங்கள் பாவித்த மொழி ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதாக இருந்தால் நாங்கள் அதனை பரிசீரிப்பதற்கு தயார்.
மேலதிகமாக, நாங்கள் அதில் எழுதி இருக்கின்ற விடயத்தை இன்னமும் பலப்படுத்துவது போன்று திருத்தங்கள் செய்வதாக இருந்தால் நாங்கள் அதையும் பரிசீலிப்பதற்கு தயார்.
ஆனால் அதில் இருக்கின்ற விடயத்தை அகற்றுவது கடினம் என்று கூறி இருக்கின்றோம். நாளைய கூட்டத்திற்கு பின்னர் அவர்களுடைய முடிவை நாங்கள் எதிர்பார்த்து இருக்கின்றோம்.
எது அவ்வாறாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை தாண்டி அந்த கடிதத்தை நாங்கள் வெளியிடுவதை தாமதிக்க முடியாது என அவர் தெரிவித்தார்.