பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் இன்று அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.
சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் கல்முனை மாநகர அம்மன் கோயில் வீதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்”, “காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு”, “அனைத்து தேசிய இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இவ் கையெழுத்துப் போராட்டத்தில் அனைத்து இன மக்களும் அதிகளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்து இட்டிருந்தார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள்,
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், அரசியல் படுகொலைகளுக்கு உள்ளானவர்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள், அரச படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதல், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் தேசிய பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு இந்த பிரச்சனைகளை தீர்ப்பதாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் உறுதி அளித்தது ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த அடக்குமுறை சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையில் வடக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள்கூட கண்டுபிடிக்கப்படுகின்றன.
இவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். எனவே இதற்கு பரந்த அளவிலான பொதுமக்களின் ஈடுபாடு தேவைப்படுகின்ற நிலையில் சம உரிமை இயக்கம் அதற்கு அரசியல் தலைமையை வழங்க தயாராக உள்ளது.
சம உரிமை இயக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே இனவாதம் மற்றும் தேசிய ஒடுக்கு முறையை ஒழித்து அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வை அடைவதே எங்கள் குறிக்கோளாக இருந்து வருகிறது இந்த முயற்சியில் எங்களுடன் இணையுமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றோம். எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை இப்போராட்டத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டிருந்தது.தமிழர்கள், முஸ்லிமகள், மலையகத் தமிழர்கள், சிங்களவர்கள் என அனைத்து இன மக்களும் உடந்த காலங்களில் கொடூரம் திறைந்த நாட்களையும் மாதங்களையும் கடந்து வந்திருக்கிறார்கள்.
1983 கருப்பு ஜூலை ஒரு உதாரணம் மட்டுமே. அதை வெறுமனே நினைவுகூருவது எங்கள் நோக்கமல்ல. அவற்றுக்கு வழிவகுத்த சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடும் ஒரு பரந்த பொது உரையாடலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
வடக்கில் புலிகளால் பதின்மூன்று அரச படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வுகளின் சங்கிலி நீண்டது. தெற்கில் அப்போதைய அரசால் ஆதரிக்கப்பட்ட இனவாதம் அண்ணளவாக 3,000 தமிழ் பொதுமக்களைக் கொன்றதுடன் அவர்களின் 13,000 வீடுகள் மற்றும் கடைகளை எரித்தது.
சுமார் ஒரு லட்சம் பேர் தமது வசிப்பிடத்தை இழந்த நிலையில் இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றனர். அது வடக்கு கிழக்கில் பேரழிவை தந்த முப்பது ஆண்டுகால யுத்தத்தின் தொடக்கமாகவும் இருந்தது.
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. காணாமல் ஆக்கப்பட்டோரிற்கும் அரசியல் படுகொலைகளுக்கு உள்ளானவர்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள், அரச படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இனவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருதல், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் உறுதியளித்தது.
ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படும் என்று தெரியவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த அடக்குமுறைச் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இனி கருப்பு ஜூலை இல்லை
இதற்கிடையில், வடக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கூட கண்டுபிடிக்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.
எனவே, இதற்கு பரந்த அளவிலான பொதுமக்களின் ஈடுபாடு தேவைப்படுகின்ற நிலையில் சம உரிமை இயக்கம் அதற்கு அரசியல் தலைமையை வழங்க தயாராக உள்ளது.
சம உரிமை இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே. இனவாதம் மற்றும் தேசிய ஒடுக்குமுறையை ஒழித்து, அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் அரசியல் திரவை அடைவதே எங்கள் குறிக்கோளாக இருந்துவருகிறது. இந்த முயற்சியில் எங்களுடன் இணையுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும். இப்போதாவது நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய் , அனைத்து தேசிய இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்யும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம் , சம உரிமைகளுக்கான இயக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





